இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன், தொடக்க வீரர், கேப்டனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். வயது, இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதம் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவர் இன்று சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான ஷிகர் தவானின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச உள்ளூர் போட்டிகளுக்கு குட்பை:
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஷிகர் தவான் அளித்துள்ள பேட்டியில், இது எனக்கு கடினமான முடிவு போல் இல்லை. நான் உணர்ச்சிவசப்படக்கூட இல்லை. நான் அழ விரும்பவில்லை. இது அன்பு மற்றும் நன்றியாகும். நான் என் வாழ்நாளின் பெரும்பாலான பகுதியை கிரிக்கெட்டிற்காகவே செலவழித்துள்ளேன். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான கட்டம் வந்துவிட்டது என்று நான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஷிகர்தவானின் இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் தவிர்க்க முடியாத தொடக்க வீரர்களில் ஷிகர்தவான் ஒருவர் ஆவார். ரோகித் சர்மாவுடன் இணைந்து பல போட்டிகளில் இந்திய அணிக்காக வெற்றிகரமான தொடக்க வீரராக திகழ்ந்துள்ளார். இவர்கள் தொடக்க ஜோடி பல சாதனைகளையும் படைத்துள்ளது.
அதிரடி மன்னன்:
1985ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி பிறந்த ஷிகர் தவான் மொத்தம் 34 டெஸ்ட் போட்டிககளில் ஆடி 7 சதங்கள் 5 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 315 ரன்கள் எடுத்துள்ளார். 167 ஒருநாள் போட்டிகளில் ஆடி 17 சதங்கள் 39 அரைசதங்களுடன் 6 ஆயிரத்து 793 ரன்கள் எடுத்துள்ளார். 68 டி20 போட்டிகளில் ஆடி 11 அரைசதங்களுடன் 1,759 ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப், ஹைதரபாத் என ஐ.பி.எல். தொடரில் பல அணிகளுக்காக ஆடியுள்ள ஷிகர் தவான் 222 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி மொத்தம் 2 சதங்கள் 51 அரைசதங்களுடன் 6 ஆயிரத்து 768 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 190 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 143 ரன்களும், டி20யில் அதிகபட்சமாக 92 ரன்களும், ஐ.பி.எல். தொடரில் அதிகபட்சமாக 106 ரன்களும் எடுத்துள்ளார். 2010ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக இந்தியாவிற்காக அறிமுகமானவர் ஷிகர்தவான். டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக 2011ம் ஆண்டு அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2013ம் ஆண்டு அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2022ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆடியுள்ளார்.