ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷான் மார்ஷ் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டருக்கு எதிராக ஷான் மார்ஷ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி ஆட்டத்தில் விளையாட இருக்கிறார்.
ஷான் மார்ஷ் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல மறக்கமுடியாத சாதனைகளை செய்துள்ளார். ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டான 2008ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடி அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல், ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்து விளங்கினார்.
ஓய்வை அறிவித்தார் ஷான் மார்ஷ்:
பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக தற்போது ஷான் மார்ஷ் விளையாடி வருகிறார். கடைசியாக இவர் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கி 49 பந்துகளில் 10 பவுண்டரிகள் உதவியுடன் 64 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தின்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தநிலையில், வருகின்ற ஜனவரி 17ம் தேதி சிட்னி தண்டருக்கு எதிராக தனது கடைசி ஆட்டத்தில் விளையாடுவேன் என்றும், இதற்கு பிறகு ஓய்வு பெறுவேன் என்றும் ஷான் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்ட ஷான் மார்ஷ்:
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் ஷான் மார்ஷ் சிறப்பாகவே செயல்பட்டார். ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக மட்டும் விளையாடினார். கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல்லில் தனது முதல் சீசனிலேயே அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். இதன்மூலம், ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஷான் மார்ஷ் இதுவரை 71 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2477 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஒரு சதமும் 20 அரைசதங்களும் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 115 ரன்கள் ஆகும்.
சர்வதேச கிரிக்கெட் எப்படி..?
ஷான் மார்ஷ் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2773 ரன்கள் அடித்துள்ளார். அதில், 7 சதங்களும், 15 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் இவரது சிறந்த ஸ்கோர் 151 ரன்கள்.
இதுபோக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2265 ரன்கள் எடித்துள்ளார். இதில், 6 சதங்கள், 10 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இவரது சிறந்த ஸ்கோர் 182 ரன்கள்.
ஆஸ்திரேலிய அணிக்காக ஷான் மார்ஷ் தனது முதல் அறிமுக ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 81 ரன்கள் எடுத்தார். 2001 ஆம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான மார்ஷ், நேற்று மார்வெல் ஸ்டேடியத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அரைசதம் அடித்தார்.
2008 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான ஷான் மார்ஷ், 38 டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2017-18ல் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா மீண்டும் வெல்ல முக்கியப் பங்கு வகித்தார். இதில், ஏழு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஷான் மார்ஷ், 74.16 சராசரியில் 445 ரன்கள் எடுத்தார். ஷான் மார்ஸ் கடந்த 2019 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடவில்லை.