தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்பு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. இதைத் தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று தென்னாப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய 40ஆவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தார். 

அத்துடன் கேப்டனாக 40 டெஸ்ட் போட்டிகளை வென்ற நான்காவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில் நாளை ஜோகனஸ்பேர்கில் தொடங்குள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சி வரலாற்றில் ஒரு சாதனையை சமன் செய்ய உள்ளார். அது என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றி பெற்ற வீரர்கள்:


கேப்டன்கள் போட்டிகள்  வெற்றி  தோல்வி  டிரா வெற்றி%
கிரேம் ஸ்மித் (2003-2014) 107 53 29 27 48.62
ரிக்கி பாண்டிங்(2004 2010) 77 48 16 13 62.33
ஸ்டீவ் வாக்(1999-2004) 57 41 9 7 71.92
விராட் கோலி(2014-*) 67 40 16 11 59.70

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக அதிக வெற்றிகளை குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார். நாளை தொடங்கும் வாண்டரர்ஸ் டெஸ்டில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் விராட் கோலி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை ஸ்டீவ் வாக் உடன் பகிர்ந்து கொள்வார். அதாவது அவர்கள் இருவரும் கேப்டனாக 41 டெஸ்ட் போட்டிகளை வென்று சமமாக இருப்பார்கள். ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவ் வாக் 57 டெஸ்ட் போட்டிகளில் 41ல் வெற்றி பெற்றுள்ளார். அந்த சாதனையை விராட் கோலி சமன் செய்வார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றி பெற்ற வீரர்கள்:

கேப்டன்கள் போட்டிகள்  வெற்றி  தோல்வி  வெற்றி%
விராட் கோலி  67 40 16 48.62
மகேந்திர சிங் தோனி 60 27 18 45
சவுரவ் கங்குலி 49 21 13 42.85
அசாரூதின்  47 14 14 29.78

ஏற்கெனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் விராட் கோலி கேப்டனாக பல சாதனைகளை படைத்துள்ளார். அதாவது ஒரே ஆண்டில் நான்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளை இரண்டு முறை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அத்துடன் செஞ்சுரியன் மைதானத்தில் வென்ற முதல் ஆசிய கேப்டன், இரண்டு பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனைகளையும் விராட் தன்வசப்படுத்தியிருந்தார். ஆகவே ஜோகனஸ்பேர்க் போட்டியில் வெற்றி பெற்று ஸ்டீவ் சாதனையை சமன் செய்வது மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் இவர் படைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க:டிராவிட்,கோலி,வாண்டரர்ஸ்... லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான காம்போ !