இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் தமிழக வீரரான அஷ்வினும் இடம்பெற்றிருந்தார். கடைசியாக 2017 ஆம் ஆண்டே அஷ்வின் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் ஆடியிருந்தார். இப்போது ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
அஷ்வினின் கிரிக்கெட் கரியரில் அவர் ஒரு கட்டத்தில் 3 விதமான ஃபார்மட்களிலிருந்துமே மெதுமெதுவாக ஓரங்கட்டப்பட்டிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் வேகவேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளை செய்து கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே, அடுத்தக்கட்ட வீரர்களின் வருகையால் அஷ்வினை ஓரங்கட்ட தொடங்கினர். வெளிநாட்டு போட்டிகளில் அஷ்வினின் பந்துவீச்சு எடுபடாது எனும் பிம்பத்தை ஏற்படுத்தி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தொடங்கினர். அஷ்வினை விட ரொம்பவே ஜுனியர் வீரரான குல்தீப் யாதவ் அஷ்வினுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டார்.
'இனியும் எங்களின் முதல் சாய்ஸாக அஷ்வின் இருக்கப்போவதில்லை. வெளிநாடுகளில் இந்திய ப்ளேயிங் லெவனில் ஒரே ஒரு ஸ்பின்னருக்குதான் வாய்ப்பு கொடுக்க முடியுமெனில் அந்த ஸ்பின்னராக குல்தீப் யாதவ்தான் இருப்பார்.' என இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரியே வெளிப்படையாக பேசியிருந்தார். வெறுமென உள்ளூர் போட்டிகளுக்கான தட்டையான பிட்ச்களுக்கான வீரராக மட்டுமே அஷ்வின் சுருக்கப்பட்டார். இது அஷ்வினை மனதளவில் பெரிதாக பாதித்தது.
டெஸ்ட் போட்டிகளை தாண்டி லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் அஷ்வின் முழுமையாக ஒதுக்கப்பட்டார். தோனியின் குட்புக்கில் இடம்பெற்றவர் அஷ்வின். இந்திய அணியில் தோனியின் செல்வாக்கு குறைய தொடங்கி தோனி கேப்டன் பதவியை கோலி கைமாற்றிவிட்டிருந்தார். இந்த 2016-17 காலக்கட்டத்திலேயே தோனியோடு சேர்த்து அஷ்வினின் செல்வாக்கும் குறைந்தது. 2016 ஆம் ஆண்டில் கடைசியாக டி20 போட்டியிலும் 2017 ஆம் ஆண்டில் கடைசியாக ஒருநாள் போட்டியிலும் ஆடியிருந்தார். அதன்பிறகு, இந்திய அணியின் தேர்வுக்குழு அஷ்வினை லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் தங்களின் ரேடாருக்குள் வைத்திருந்ததாகவே தெரியவில்லை. முற்றிலுமாக ஒதுக்கப்பட்டிருந்தார். ஸ்பின் ட்வின்ஸ் என சஹாலும், குல்தீப் யாதவும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கிரிக்கெட்டில் லெக் ஸ்பின், சைனா மேன் மற்றும் மிஸ்ட்ரி பௌலிங் போன்றவற்றிற்கும் இந்த காலக்கட்டத்தில் மவுசு கூட தொடங்கியது. ஆஃப் ஸ்பின்னரான அஷ்வின் ஒதுக்கப்பட்டதற்கு இதுவுமே ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நான் மிகச்சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தேன். ஆனாலும் என்னை ஒதுக்கினார்கள். தோனியிடம் சென்று என்ன காரணம் என கேட்டேன். எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. முறையான விளக்கமின்றி ஒதுக்கப்படும் இடத்தில் எனக்கென்ன வேலை என ஒதுங்கிவிட்டேன்' என ஹர்பஜன் சிங் பேசியிருப்பார்.
கிட்டத்தட்ட அஷ்வினுக்குமே ஹர்பஜன் சிங் போன்ற நிலை ஏற்பட்டது. அணியிலிருந்து ஒதுக்கப்பட்டதோடு காயங்களும் சேர்ந்து கொண்ட சமயத்தில் அஷ்வினுக்குமே ஓய்வுபெறும் எண்ணங்கள் உதயமாகியிருக்கிறது. ஆனால், அஷ்வின் அதை மேற்கொண்டு பரிசீலிக்கவில்லை. காரணம், அவரின் விடாப்பிடியான குணாதிசயம் மற்றும் அசாத்தியங்களின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை.
2010 ஆம் ஆண்டு சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக வென்றிருந்தது. ஆனால், அந்த தொடரின் லீக் போட்டிகளில் சென்னை அணி அவ்வளவு பிரமாதமாக ஒன்றும் ஆடியிருக்கவில்லை. வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வென்று நூலிழையில் அரையிறுதிக்குள் நுழைந்து கோப்பையை தட்டி தூக்கியது. லீக் போட்டிகளில் சென்னை அணி தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டிருந்த போது ஒருநாள் சென்னை அணியில் ஆடிய தமிழக வீரர்களான பத்ரிநாத் மற்றும் அஷ்வின் இருவரும் நீச்சல் குளத்தில் இலகுவான நேரத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அஷ்வின் 'இந்த முறை நம்மதான் கப் அடிக்க போறோம்னு தோணுது' என பத்ரியிடம் கூறியிருக்கிறார். அஷ்வினின் அந்த வார்த்தைகளை பத்ரி உட்பட ஒட்டுமொத்த அணியுமே அந்த சமயத்தில் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கும். ஆனால், அதன்பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே. இது ஒரு சம்பவம் மட்டுமே. அஷ்வினிடம் பழகியவர்களிடம் பேசினால் இதைபோன்று பல சம்பவங்களை அடுக்குவார்கள்.
யதார்த்தங்களுக்குள் சிக்கிக்கொண்டு சூழல்களின் மீது பழி போட்டுக்கொண்டு வாழ்வதில் அஷ்வினுக்கு எப்போதுமெர் விருப்பம் இருந்ததில்லை. 'Anyone can do Anything' என்பதுதான் அஷ்வினின் இயக்க ஆற்றல். அவர் யாரை பார்த்தும் எந்த சூழலை பார்த்தும் அவ்வளவு எளிதில் மிரட்சியடைந்து விடமாட்டார். உங்களை பயமுறுத்திய பேட்ஸ்மேன் யார்? எனும் ஒரு கேள்விக்கு, பொதுவாக இப்படி ஒரு கேள்வி ஒரு பௌலரிடம் கேட்கப்பட்டால் பெரும்பாலானோர் தோனி, கோலி, ஏபிடி என எதாவது ஸ்டார் வீரர்களை குறிப்பிட்டு அவர்களின் ரசிகர்கள் திருப்திப்படும் அளவுக்கு அவர்களை புகழ்ந்து பேசுவார்கள். ஆனால், அஷ்வின் வித்தியாசமானவர். 'அப்படியெல்லாம் யாருக்கும் பயந்ததில்லை. யாராக இருந்தாலும் தில்லுக்கு துட்டு என இறங்கி வீசிவிடுவேன்' என பேசியிருப்பார். இதுதான் அஷ்வின். 'Every tunnel has light at the end of it. but only those in the tunnel who believe in the light will live to see it' அஷ்வின் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சமயத்தில் அவரின் வீட்டு சுவற்றில் அவர் எழுதி வைத்த வாசகம் இது. அசாத்தியங்களின் மீதான அவரின் நம்பிக்கையும் இடைப்பட்ட பயணத்தில் எதைக்கண்டும் மிரட்சியடையாத குணாதிசயமுமே அவரை மூன்று ஃபார்மட்களிலுமே மீண்டும் ஒரு கம்பேக்கை கொடுக்க வைத்து அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாற்றியிருக்கிறது.