IND vs SA Innings Highlights: உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 326 ரன்களை சேர்த்தது.


இந்தியா - தென்னாப்ரிக்கா மோதல்:


உலகக் கோப்பையின் 37வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறுகிறது. தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதுவரை விளையாடிய 7 லீக் போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதிப்பெற்ற இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்காவை எதிர்கொண்டுள்ளது.


அதிரடி காட்டிய ரோகித் சர்மா:


கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரோகித் சர்மா, இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தார். வெறும் 24 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 40 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த சுப்மன் கில், 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.


ஸ்ரேயாஸ் - கோலி கூட்டணி:


தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கோலி கூட்டணி, நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதனால் ரன் ரேட் வேகம் கணிசமாக குறைந்தது. இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடி பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாச தொடங்கினார். கோலியும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை அடித்து ஆடினார். இதனால் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க, ரன் ரேட் வேகமும் கிடுகிடுவென உயர்ந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 77 ரன்கள் சேர்த்து இருந்தபோது நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி 3வது விக்கெட்டிற்கு 134 ரன்களை சேர்த்தது.


49வது சதத்தை பூர்த்தி செய்த கோலி:  


இதையடுத்து வந்த கே. எல். ராகுல் 17 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 8 ரன்களை மட்டுமே சேர்ந்து நடையைகட்டினார். சூர்யகுமார் யாதவும் 22 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் கோலி நிலைத்து நின்று ஆடினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 119 பந்துகளில் 100 ரன்களை விளாசி தனது 49வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய சச்சினின் சாதனையை சமன் செய்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 101 ரன்களை சேர்க்க, இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்களை விளாசினார்.


தென்னாப்ரிக்காவிற்கு ரன்கள் இலக்கு:


இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய 5 அணி விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை சேர்த்தது. தென்னாப்ரிக்கா அணி சார்பில் நிகிடி, ஜான்சென், ரபாடா, ஷம்ஷி மற்றும் கேஷவ் மகாராஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினனர். இதையடுத்து இந்திய அணி நிர்ணயித்த 327 ரன்கள் என்ற இலக்கை, தென்னாப்ரிக்கா எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.