உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி 18வது ஓவரின் கடைசி பந்திலே எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக, 18 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது 18வது ஓவரை வீசிய முகமது ஷமி வீசிய முதல் 5 பந்திலே பாகிஸ்தான் வெற்றி பெற்றது.






இந்த தோல்விக்கு பிறகு, இந்தியாவின் தோல்விக்கு காரணம் முகமது ஷமிதான் என்று சமூக வலைதளங்களில் அவரை பலரும் கேலி செய்து வருகின்றனர். குறிப்பாக, சிலர் அவரது மதத்தை குறிப்பிட்டு கண்டனத்துக்குரிய வகையில் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தவகை விமர்சனங்களுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் முகமது ஷமிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சேவாக் தனது டுவிட்டர் பதிவில், முகமது ஷமி மீது இணையதளத்தில் நடத்தப்படும் விமர்சனங்கள் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் அவருடன் நிற்கிறோம். முகமது ஷமி ஒரு சாம்பியன். யாரெல்லாம் இந்தியாவிற்காக இந்திய தொப்பியை அணிந்து ஆடுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இந்தியன் என்ற உணர்வு இணையதளத்தில் உள்ள கும்பல்களை விட அதிகம். உங்களுடன் இருக்கிறோம் ஷமி. அடுத்த போட்டியில் பார்ப்போம்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






ஷமிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஷமி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இந்த மக்கள் வெறுப்பால் நிரம்பியுள்ளனர், ஏனென்றால் யாரும் அவர்களுக்கு அன்பைக் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்


ஷமிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ள சச்சின், நாம் இந்திய அணிக்கு ஆதரவாக நிற்கிறோம் என்றாலே, அதில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதரவாக நிற்கிறோம் என்றே அர்த்தம். ஷமி சிறந்த வீரர். தலைசிறந்த பந்துவீச்சாளர். நான் ஷமிக்கும், இந்திய அணிக்கும் ஆதரவாக நிற்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்


 






ஷமி மீதான சிலரின் வெறுப்பு குறித்து பேசிய இர்பான் பதான், என் மீதும் இப்படி வெறுப்பை உமிழ்ந்துள்ளனர். ஆனால் என்னை யாரும் பாகிஸ்தானுக்கு போ எனக்கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார்