பாச மழையில் சச்சின் டெண்டுல்கர்:


கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றாலும் இவர் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பும்,பாசமும் அலாதியானது. அதன்படி, சச்சின் டெண்டுல்கர் எங்கு பயணம் செய்தாலும் ரசிகர்கள் அவர் மீது பாச மழையை பொழிந்து வருகின்றனர். அதோடு சச்சினை வாழ்த்தி முழக்கமிடுவது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, கிரிக்கெட் விளையாடி மகிழ்வதையும் செய்து வருகின்றனர்.


இச்சூழலில் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோருடன் கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  இந்த பயணத்தில் அங்குள்ள சிறுவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கின்றார்.


கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்:


 






இந்நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவ்வகையில், குல்மார்க் பகுதிக்கு சென்றபோது உள்ளூர் இளைஞர்களுடன் சாலையில் கிரிக்கெட் விளையாடினார். சச்சினுக்கு ஒரு பந்துவீச்சாளர் பந்து வீசினார். முதல் 5 பந்துகளையும் சச்சின் சரியாக அடித்தார். பின்னர் மட்டையை தலைகீழாக பிடித்த சச்சின், கடைசி பந்தில் என்னை அவுட் ஆக்குங்கள் பார்க்கலாம் என சவால் விட்டார். ஆனால் இந்த முறையும் அவரை பந்துவீச்சாளரால் அவுட் ஆக்க முடியவில்லை. கடைசி பந்தை மட்டையின் கைப்பிடியால் துல்லியமாக தடுத்தார் சச்சின். பின்னர் உள்ளூர் ரசிகர்கள் அனைவருடனும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.


அதன்படி சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வீடியோவில்," கிரிக்கெட் மற்றும் காஷ்மீர்.  சொர்க்கத்தில் ஒரு போட்டி" என்று கூறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர்," நான் சந்தித்த மிகவும் எளிமையான பிரபலங்களில் ஒருவர்  சச்சின். 2003 இல், நான் அவரை தாஜ் பெங்கால் லாபியில் அவரைப் பார்த்து உறைந்து போனேன்.





என் நிலையை உணர்ந்த அவர், என்னைப் போன்ற ஒரு சாதாரண ரசிகரிடம் மென்மையாக கை குலுக்கி சென்றார்." என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர்,"நீங்கள் தான் உண்மையான மாஸ்டர் ..... எப்போதும் அன்பான மனிதர் . சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் சார்" என்று தெரிவித்துள்ளார். தற்போது சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


 


மேலும் படிக்க: Chris Gayle IPL Record: IPL-ல் அதிக சிக்ஸர்...யாரும் நெருங்க முடியாத கிறிஸ் கெய்லின் சாதனை!


 


மேலும் படிக்க: Rishabh Pant: தீவிர பயிற்சியில் ரிஷப் பண்ட்... ரசிகர்கள் உற்சாகம்! வைரல் வீடியோ!