Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டிலே அதிக ரன்கள், அதிக சதங்கள் என்று யாராலும் நெருங்க முடியாத சாதனைகளை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டிற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளார். ஆனால், சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக ஆடுவதற்கு முன்பே பாகிஸ்தானுக்காக ஆடியுள்ளார் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

Continues below advertisement

என்ன நடந்தது?

பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு 1987ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடியது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் அணி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஆடியது.

அப்போது, இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்க உணவு இடைவேளைக்காக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் மற்றும் அப்துல் காதிர் ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். ஆனால், உணவு இடைவேளை முடிந்து அவர்கள் வரவில்லை. இதனால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. 

Continues below advertisement

பாகிஸ்தானுக்காக ஆடிய சச்சின்:

அப்போது, அந்த போட்டியில் எல்லைக்கோட்டிற்கு அந்த பகுதியில் பந்துகளை எடுத்துப் போடும் சாதாரண சிறுவனாக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். அப்போது, பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான் இந்திய அணியில் இருந்து மாற்று வீரர் தருமாறு கேட்டார். அப்போது, இந்திய அணி மாற்று வீரராக சச்சின் டெண்டுல்கரை அனுப்பியது. 

பின்னர், அவரை ஃபீல்டிங் செய்ய வைத்தது பாகிஸ்தான் அணி. அப்போது, அவரும் களத்தில் சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் அணிக்காக  இந்திய அணிக்கு எதிராக ஃபீல்டிங் செய்தார். லாங் ஆனில் ஃபீல்டிங் செய்த டெண்டுல்கர் கபில்தேவ் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க எடுத்த ஃபீல்டிங் முயற்சியை கண்டு பாகிஸ்தான் வீரர்களும் வியந்தனர். பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் வரவும் இவர் மீண்டும் மைதானத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது, சச்சினுக்கு வெறும் 13 வயதுதான் இருந்தது.

அறிமுகம்:

சச்சின் டெண்டுல்கர் பின்னாளில் 1989ம் ஆண்டு  தன்னுடைய 16வது வயதில் இந்திய அணிக்காக பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கினார். 52 வயதான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்துள்ளார். 68 அரைசதங்களும், 51 சதங்களும் அடங்கும்.  6 இரட்டை சதங்கள் விளாசியுள்ளார். மேலும், 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 18 ஆயிரத்து 426 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 96 அரைசதங்கள், 49 சதங்கள், 1 இரட்டை சதம் அடங்கும். 

78 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 334 ரன்கள் விளாசியுள்ளார். 13 அரைசதங்கள், 1 சதம் அடங்கும். இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளைப் புரிந்த சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பல போட்டிகளில் சதங்களை விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.