லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கவில்லை என அவரது எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் மூலம் மூன்று அணிகளை வைத்து நடத்தப்படுகிறது லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக். சமீபத்தில் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் போட்டிகள் ஓமன் நாட்டின் மஸ்கர் நகரில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் மூத்த பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி லெஜண்ட்ஸ் லீக் போட்டிகளின் ஆணையராகப் பொறுப்பில் உள்ளார்.
சமீபத்தில் இந்தப் போட்டித் தொடர் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்று பதிவிடப்பட்டு அதன்பிறகு அழிக்கப்பட்டது. அதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இந்திய அணியான `இந்தியா மஹாராஜாஸ்’ அணியை அறிமுகம் செய்திருந்தார். அதில் சச்சின் டெண்டுல்கர் இந்தியா மஹாராஜாஸ் அணியில் இடம்பெறுவார் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டு மேலாண்மை நிறுவனமான எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் தரப்பில் ட்விட்டரில் இதுகுறித்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், `லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்பார் என்று வெளியான தகவல் போலியானது. போட்டியின் அமைப்பாளர்கள் கிரிக்கெட் ரசிகர்களையும், நடிகர் அமிதாப் பச்சன் ரசிகர்களையும் தவறாக வழிநடத்துவதில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 20 அன்று தொடங்கும் இந்தப் போட்டியில் மூன்று அணிகள் தங்களுக்குள் போட்டியிட உள்ளனர்.
இந்திய அணியில் யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், யூசுஃப் பதான் முதலானோர் இடம்பெற்றுள்ளனர்.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் அமைப்பாளர்கள் ஏற்கனவே ஆசியா அளவிலான அணி ஒன்றை அறிவித்திருந்தனர். `ஆசியா லயன்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட அந்த அணியில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் அணிகளில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறுவார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. சோயப் அக்தர், ஷாஹித் அஃப்ரிதி, சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ், ரோமெஷ் கலுவிதரனா, திலகரத்னே தில்ஷன், அஸார் மஹ்மூத், உபுல் தரங்கா, மிஸ்பாஹ் உல் ஹக், முகமது ஹஃபீஸ், சோயப் மாலிக், முகமது யூசுஃப், உமர் குல், அஸ்கர் ஆப்கன் ஆகியோர் ஆசிய அணியில் இடம்பெறுவதாக கூறப்பட்டிருந்தது.