இந்தியா முழுவதும் நேற்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று பலரும் விளையாட்டின் முக்கியத்துவம் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தேசிய விளையாட்டு தினம் தொடர்பாக ஒரு பதிவை செய்திருந்தார். 


அந்தப் பதிவில், “தேசிய விளையாட்டு தினத்தன்று என்னுடைய வாழ்க்கையை அர்பணித்த மற்றும் எனக்கு பிடித்த விளையாட்டை விளையாடாமல் இருந்தால் எப்படி? நீங்களும் உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடும் படத்தை பதிவிடுங்கள்” எனக் கூறியிருந்தார். அத்துடன் சச்சின் டெண்டுல்கர் ஒரு உள் விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவிட்டிருந்தார். 


 






அந்த வீடியோவில் சச்சின் டெண்டுலகர் மீண்டும் சிறப்பாக சில ஷாட்களை அடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் பலரும் கிரிக்கெட் கடவுளை பேட் உடன் பார்த்துவிட்டோம் என்பது போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


தேசிய விளையாட்டு தினம்:


பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய பிறகு தயான்சந்த் இந்திய ஹாக்கி அணியிலிருந்து விலகி இருந்தார். ராணுவ அணியில் மட்டும் அவ்வப்போது போட்டிகளில் பங்கேற்று வந்தார். 1956ஆம் ஆண்டு அவர் ராணுவத்திலிருந்து மேஜர் பதவியுடன் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதன்பின்னர் சில நாட்கள் ஹாக்கி பயிற்சியாளராகவும் இருந்தார். 1979ஆம் ஆண்டு தன்னுடைய 74ஆவது வயதில் இவர் இயற்கை எய்தினார். அவருடைய நினைவாக ஒரு தபால் தலை வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ள ஒரே ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் தான். 


 






ஹாக்கி விளையாட்டில் அதற்கு பின்னர் பல்பீர்சிங் சீனியர், சாஃபர் இக்பால் போன்ற பல வீரர்கள் வந்தாலும் யாரும் தயான்சந்தின் மாயஜால ஆட்டத்தை செய்து காட்ட முடியவில்லை. இதன்காரணமாகவே அவர் ஹாக்கி உலகின் தாதா அதாவது அனைவருக்கும் (அண்ணன்)முன்னோடியாக இருக்கிறார். அவருடைய பிறந்தநாளை இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக அறிவித்து அவரை கௌரவித்தது. அத்துடன் விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை தயான்சந்த் பெயரில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.