கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு முக்கிய தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு 50-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் தங்களுக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் நிலவட்டும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
WWW E வீரர் ட்ரிப்பில் எச் வாழ்த்து
டிரிப்பில் எச் வெளியிட்டுள்ள வீடியோவில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு www e குழு சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சச்சின் கிரிக்கெட் மட்டும் அல்லாது தனது வாழ்வியலிலும் பல தலைமுறையினருக்கு உந்து சக்தி என்றும் அவர் புகழாராம் சூட்டினார்.
சச்சினின் சாதனைகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சச்சின் ஆவார். 2008-ல் லாராவின் 11,953 ரன்களைக் கடந்து அவர் இந்தச் சாதனையை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டைச் சதம் எடுத்த வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். 2010-ல் குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் 147 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்தவர் சச்சின். மொத்தம் 49 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 1 வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் சச்சின். ஒரு வருடத்தில் அதிக ஒருநாள் சதங்கள் எடுத்த வீரர் சச்சின். 1998-ல் 9 ஒருநாள் சதங்கள் எடுத்தார். வேறு எந்த வீரரும் ஒரு வருடத்தில் 8 ஒருநாள் சதங்களைக்கூட எடுத்ததில்லை.
சச்சின் விளையாடிய காலத்தில் டெஸ்ட் தகுதி பெற்ற அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்துள்ளார். 2004 டிசம்பரில் இச்சாதனையைப் புரிந்தார். தனது 169-வது டெஸ்டை இலங்கைக்கு எதிராக விளையாடினார் சச்சின். அப்போது ஸ்டீவ் வாஹ்-கின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்டுகளில் விளையாடிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். சச்சின் மொத்தம் 200 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்த ஒரே வீரர் சச்சின். இந்தியாவின் விராட் கோலி 75 சதங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். அதேபோல டெஸ்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த வீரரும் சச்சின் தான். அதிகமுறை 50+ ரன்கள் எடுத்த பேட்டர்களின் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் உள்ளார். 264 முறை 50+ ரன்களைக் கடந்துள்ளார்.
சர்வதேச ஆட்டங்களில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவர் சச்சின். டெஸ்டில் 14 முறையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 62 முறையும் விருதுகளை வென்றுள்ளார். அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்தவர் சச்சின். மொத்தம் 51 சதங்கள் எடுத்துள்ளார். .