இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக, 15 சீசன்களாக நடந்து வரும்  இந்திய ப்ரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டியைப் போல் தென் ஆப்பிரிக்காவிலும் நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியின் உரிமையாளர்களான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸின் உரிமையாளர்கள் தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெறவுள்ள புதிய உள்நாட்டு டி20 லீக் தொடரில் ஆறு அணிகளை வாங்கியுள்ளது. 






இந்த லீக் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான சூப்பர்ஸ்போர்ட் உடன் இணைந்து நடத்துகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உரிமையாளரான இந்தியன் சிமெண்ட்ஸ், ஜோகன்னஸ்பர்க் உரிமையை கைப்பற்றியுள்ளது, மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் உரிமையை கைப்பற்றியுள்ளது. அதேபோல், சன்ரைசர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் டிவி குழுமம், க்கெபெர்ஹா (முன்னர் போர்ட் எலிசபெத்) உரிமையை கைப்பற்றியுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு இறுதியில் லக்னோ அணியின் ஐபிஎல் உரிமையை  7090 கோடி ரூபாய் செலுத்தி வாங்கிய ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழு டர்பன் அணியையும், அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பார்ல் அணியை வாங்கியது.  மேலும், டெல்லி கேப்பிடல்ஸின் இணை உரிமையாளரான பார்த் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் சவுத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் கைப்பற்றியுள்ளது. 


இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் பெயரை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கான பெயரை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்ற லோகோவுடன், அதன் தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோரையும் அறிவித்தது. 


ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் செயல்படுவார் என்றும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃப்ளெமிங் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 






இதுகுறித்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பேசுகையில், “சென்னையுடன் எனக்கு மிகவும் நீண்ட உறவு உள்ளது. மீண்டும் அந்த வாய்ப்பு வந்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு இது நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். லீக் கிரிக்கெட் ஒரு நாட்டு கிரிக்கெட்டுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற வித்தியாசத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன்”என்று தெரிவித்தார்.