ஆசிய கோப்பைத் தொடரில் நேற்று போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அடுத்து களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. 


இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒரு நேர்காணல் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் சில கருத்துகளை முன்வைத்துள்ளனர். அதில் சூர்யகுமார் யாதவ், “எனக்கு விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்வது எப்போதும் பிடித்த விஷயங்களில் ஒன்று. நான் களத்திற்கு சென்றவுடன் ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று நினைத்தேன். அப்போது என்னுடைன் நீங்கள் களத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.


 






ஏனென்றால் நீங்கள் 30-35 பந்துகள் விளையாடிய பிறகு உங்களுடைய ஸ்டிரைக் ரேட் 200க்கு மேல் இருக்கும். ஆகவே ரன்கள் எளிதாக வரும். இதற்காக நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் விளாசினேன். 6 சிக்சர் அடிக்க முடிக்கவில்லை. எனினும் யுவராஜ் பாஜியை தாண்ட எனக்கு விருப்பமில்லை. என்னுடைய ஆட்டம் அணிக்கு பயன் உடையதாக அமைந்தது” எனத் தெரிவித்தார். 


அந்த வீடியோவில் பேசிய விராட் கோலி, “நான் ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் களமிறங்குகிறேன். இதனால் என்னுடைய மனம் புத்துணர்ச்சியாக இருந்தது. கடைசி 2 போட்டிகளிலும் நான் சிறப்பாக பேட்டிங் செய்வதை உணர்ந்தேன். நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் உங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தது உணர்வது ஒரு சில சமயங்களில் தான். அதை நான் கடந்த இரண்டு போட்டிகளிலும் உணர்ந்தேன். அணியில் என்னுடைய வேலை ஒன்று தான். சரியாக யார் வந்தாலும் அவர்களுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும். அத்துடன் சமயம் கிடைக்கும் போது சில ரிஸ்க் எடுத்து பவுண்டரிகளை அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதை சரியாக செய்தேன்“ எனக் கூறினார்.