இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொணடு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்று வருகிறது.


தனி ஆளாக மிரட்டும் பவுமா:


இதில் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, தற்போது தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது.


தென்னாப்பிரிக்கா அணிக்காக முதல் இன்னிங்சில் அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா தனி ஆளாக போராடி 70 ரன்கள் விளாசினார். மொத்தம் 117 பந்துகளை எதிர்கொண்ட பவுமா 9 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் விளாசினார்.


அந்தரத்தில் பறந்து அப்பர்கட் சிக்ஸர்:


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லகிரு குமாரா வீசிய பவுன்சர் ஒன்றை தெம்பா பவுமா அந்தரத்தில் பறந்து அப்பர் கட் ஷாட் அடித்தார். அந்த பந்து விக்கெட் கீப்பருக்கு பின்புறம் பறந்து சிக்ஸருக்கு சென்றது. பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்கு பவுன்சர் பந்துகளை பயன்படுத்துவார்கள். அதுவும் உயரம் குறைவான பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க பவுன்சர்களை வீசுவது வழக்கம்.






தெம்பா பவுமாவிற்கு எதிராக லகிரு குமாரா வீசிய அந்த பந்தை பவுமா மைதானத்திற்கு வெளியே அனுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிக்ஸரை அடித்த பவுமாவை பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் தென்னாப்பிரிக்கா அணியின் டோனி 17 ரன்களில் அவுட்டானாலும் மார்க்ரம்  47 ரன்களுக்கு அவுட்டானார்.


தோல்வியின் பிடியில் இலங்கை:


முல்டர் 15 ரன்களில் ஏமாற்றினாலும் ஸ்டப்சுடன் கை கோர்த்து பவுமா தென்னாப்பிரிக்கா அணியை மீட்டெடுத்து வருகிறார். பவுமா 66 ரன்களுடனும், ஸ்டப்ஸ் 76 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். தற்போதே தென்னாப்பிரிக்க அணி 390 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இலங்கைக்கு 500 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


இலங்கை அணிக்கு எதிராக யான்சென் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இலங்கை அணிக்காக முதல் இன்னிங்சில் லகிரு குமாரா, அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.