இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி ஜோஹன்பெர்ஹில் உள்ள நியூ வண்டரெர்ஸ் மைதானத்தில் இந்திய நேரம் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. 


முதல் போட்டி மழையால் தடைபட்டது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வருகின்றது. இதனால் இந்திய அணி இந்த போட்டியை வென்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது. 


கடந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். ஆனால் இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் களமிறங்கியது. இந்திய அணியின் இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் தொடங்கினர். இதில் கில் முதல் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். ஆனால் போட்டியின் மூன்றாவது ஓவரினை வீசிய கேசவ் மஹராஜ் கில் 12 ரன்கள் சேர்த்த நிலையிலும், திலக் வர்மா தான் சந்தித்த முதல் பந்திலும் வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா நெருக்கடியை உருவாக்கிவிட்டதாக தோன்றியது. ஆனால் களத்தில் இருந்த ஜெய்ஸ்வாலுடன் இணைந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்  சரவெடியாக வெடித்தார். 


இருவரும் இணைந்து யார் வீசினாலும் பவுண்டரிதான் என்ற மோடுக்கு மாறிவிட்டனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தினை எட்டினர். இதையடுத்து 41 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்கள் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஷியிடம் இழந்து வெளியேறினார். 


ஆனால் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸரகளையும் விளாசிவந்த சூர்யகுமார் யாதவ் விக்கெட்டினை கைப்பற்றுவதை விடவும், அவரை ரன் எடுக்காமல் செய்வதே போதுமானது என தென்னாப்பிரிக்கா அணி நினைக்க ஆரம்பித்து விட்டது. சூர்யகுமார் யாதவ் சதத்தினை நெருங்கியதால் களத்தில் இருந்த ரிங்கு சிங் அவருக்கு அதிகப்படியாக ஸ்ட்ரைக் வழங்கி வந்தார். 


சூர்யகுமார் யாதவ் 55 பந்தில் தனது 4வது சர்வதேச டி20 சதத்தினை எட்டினார். ஆனால் அடுத்த பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அவர் 56 பந்துகளில் 7 பவுண்டரி 8 சிக்ஸர்கள் விளாசி 100 ரன்கள் சேர்த்திருந்தார். 


இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்துள்ளது.