தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 


 


முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மாயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இருவரும் தென்னாப்பிரிக்க அணியின் முதல் 15 ஓவர்களை சிறப்பாக சமாளித்து அடினர். உணவு இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது இருவரும் நிதான ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். 


 






சிறப்பாக ஆடிய மாயங்க் அகர்வால் அரைசதம் கடந்து அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இவர் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின்னர் தற்போது மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையை ராகுல்-மாயங்க் அகர்வால் ஜோடி பெற்றுள்ளது. 


 


தென்னாப்பிரிக்காவில் 100 ரன்களுக்கு மேல் குவித்த இந்திய தொடக்க ஜோடிகள்:


 


153 -வாசிம் ஜாஃபர் தினேஷ் கார்த்திக் கேப்டவுன் 2006/07


137 -கவுதம் கம்பீர்-சேவாக்  செஞ்சுரியன் 2010/11


117 -கே.எல்.ராகுல்-மாயங்க் அகர்வால் செஞ்சுரியன் 2021/22


மாயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.  செஞ்சுரியன் மைதானத்தில் புஜாராவின் இரண்டாவது கோல்டன் டக் அவுட்டாக இது அமைந்துள்ளது. கடைசியாக 2017-18ஆம் ஆண்டு இந்திய தொடரின் போது செஞ்சுரியன் போட்டியில் புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் கோல்டன் டக் அவுட் ஆகியிருந்தார்.  அதன்பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடி இந்திய ஸ்கோரை உயர்த்தினர். 


தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி 35 ரன்கள் எடுத்திருந்த போது நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி அவுட் ஆனாலும் மறுமுனையில் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரும் ரஹானேவும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை மிகவும் எளிதாக எதிர்கொண்டனர். குறிப்பாக ரஹானே வந்தவுடன் பவுண்டரிகளாக அடிக்க தொடங்கினார்.  கே.எல்.ராகுலும் தன் பங்கிற்கு சிறப்பாக விளையாட தொடங்கினார். 


 




217 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 14 பவுண்டரிகளின் உதவியுடன் கே.எல்.ராகுல் சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கே.எல்.ராகுல் அடிக்கும் 7ஆவது சதம் இதுவாகும். சற்று முன்பு வரை இந்திய அணி 3விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 103* ரன்களுடனும், ரஹானே 25* ரன்களுடனும்  களத்தில் உள்ளனர். 


மேலும் படிக்க: SA டெஸ்ட் தொடரில் விராட் கோலி படைக்கவிருக்கும் 7 மகத்தான சாதனைகள்.. என் வழி தனி வழி பாணியில் இனி கோலி!