லெஜண்ட்ஸ் லீக் டி 20:


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டியில், 4 அணிகள் இடம்பெற்று விளையாடின. முதல் சீசனில் வேர்ல்டு ஜெயிண்ட்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. 


இந்நிலையில் தான் இந்த ஆண்டிற்கான சீசன் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் இந்தியா கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில், இந்தியா கேபிடல்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஸ்ரீசாந்த் அவரைப் பார்த்து முறைத்துள்ளார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காம்பீர் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். அதன்பின்னர், காம்பீர் அவரைப் பார்த்து ஏதோ சொல்ல இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. 


இந்த நிலையில் கம்பீர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் ஸ்ரீ சாந்த்.


உங்களுக்கு என்ன தான் பிரச்சனை:


இது தொடர்பாக ஸ்ரீ சாந்த் பேசுகையில், “ஒரு சகோதரன் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான எல்லையை நீங்கள் கடந்து விட்டீர்கள். அனைத்திற்கும் மேல் நீங்கள் மக்களின் பிரதிநிதியாக இருக்கிறீர்கள். எனினும் அதையும் மீறி மற்ற கிரிக்கெட் வீரர்கள் மீது உங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறீர்கள்.


உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை. நீங்கள் என்னை திட்டிய போது நான் சிரித்துக் கொண்டு நடந்ததை கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் தொடர்ந்து நீங்கள் என்னை பிக்சர் (fixer) சூதாட்டத்தில் ஈடுபட்டவன் என்று கூறுகிறீர்கள். உச்சநீதிமன்றமே எனக்கும் அந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை எனக் கூறி விடுதலை செய்த பிறகு மீண்டும் என்னை அவ்வாறு கூறுவது சரிதானா? அப்படி அழைக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.


மேலும், “நீங்கள் என்னை மட்டும் திட்டவில்லை. நடுவர்கள் சக வீரர்கள் அனைவரையும் தானே திட்டினீர்கள். உங்களுடைய அகங்காரம் உங்கள் கண்ணை மறைத்து விட்டது. நீங்கள் யாருக்குமே மரியாதை கொடுப்பதில்லை. உங்களுக்காக ஆதரவாக நின்ற எனக்கும் மரியாதை தரவில்லை. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு வரை உங்கள் மீது நான் அளவற்ற மரியாதையை வைத்திருந்தேன்.


ஆனால் அது அனைத்தும் இன்று போய்விட்டது. என்னை நீங்கள் பிக்சர் என்று ஒரு முறை கூறவில்லை. ஏழு, எட்டு முறை கூறி விட்டீர்கள். மேலும் ஆபாசமான சில வார்த்தைகளையும் என்னையும் நடுவரை நோக்கியும் நீங்கள் பயன்படுத்தினீர்கள். தொடர்ந்து நீங்கள் என்னை கோபமாக்கினீர்கள்.


கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார்:


நான் பொறுத்துக் கொண்ட அளவில் வேறு யாரும் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் அமைதியாக போயிருக்க மாட்டார்கள்” என்றும், உங்களை மன்னித்திருக்கவும் மாட்டார்கள். உங்களுக்கு நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று தெரியும். இதனால் கடவுள் உங்களை நிச்சயமாக மன்னிக்க மாட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு நீங்கள் களத்திற்கு வரவே இல்லை. அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்” எனவும் ஸ்ரீ சாந்த் கூறியுள்ளார். சக நாட்டு வீரர்களை இப்படி சண்டை போட்டுக்கொள்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.