இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையும் வென்ற அணியில் ஸ்ரீசாந்த் இடம்பெற்றிருந்தார். தனது வேகப்பந்தாலும், ஸ்விங்காலும் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வல்லமை கொண்ட ஸ்ரீசாந்த், அவ்வபோது சர்ச்சைகளிலும் சிக்கி திணறினார்.
மேட்ச் பிக்சிங் காரணமாக ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்திருந்தாலும், 2007 டி20 உலகக் கோப்பையில் ஸ்ரீசாந்தின் பங்களிப்பு யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஜோகிந்தர் ஷர்மாவின் பந்துவீச்சில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மிஸ்பா-உல்-ஹக்கை கேட்ச் பிடித்து இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
அதேபோல், 2007 டி20 உலகக் கோப்பையில் குரூப் ஸ்டெஜில் பாகிஸ்தானின் கடைசி ஜோடியை ரன் அவுட் செய்து போட்டியை டிரா செய்தார் ஸ்ரீசாந்த். அதை தொடர்ந்து, இந்தியா பவுல் அவுட் முறையில் வெற்றி பெற்றது.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்திய அணி இலங்கை அணியை தோற்கடித்து 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அந்த போட்டியில் ஸ்ரீசாந்தும் விளையாடினார். அதுவே, இவரது கடைசி ஒருநாள் போட்டியாகும்.
2013 மேட்ச் பிக்சிங் - ஸ்ரீசாந்த்:
கடந்த 2013ம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர். ஃபிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் தவிர அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இந்த மூன்று வீரர்களுக்கும் ஆயுள் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, நீண்ட நாட்களாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து இவர்களது வாழ்நாள் தடை கடந்த 2019ம் ஆண்டு ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த தடையானது முடிவுக்கு வந்தநிலையில், கடந்த 2021 ம் ஆண்டு சையத் முஷ்டாகி அலி டிராபிக்கான 20 பேர் கொண்ட அணியில் ஸ்ரீசாந்த் இடம் பிடித்தார். தொடர்ந்து, 2021 மற்றும் 2022 ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்கெடுத்து, அவரை இந்த அணியும் வாங்கவில்லை.
கடந்த 2022 ம் ஆண்டு மார்ச் 9 ம் தேதி ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஸ்ரீசாந்த் கிரிக்கெட் வாழ்க்கை:
கடந்த 2006 மார்ச் மாதம் ஸ்ரீசாந்த் தனது முதல் டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை, 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தி 281 ரன்கள் எடுத்தார். 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2006 டிசம்பரில் தனது முதல் டி20 போட்டியில் விளையாடிய அவர், மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.