இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஜாம்பவான்களாக பார்க்கப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, 2008 ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர்.
பல்வேறு சூழ்நிலைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியும் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலாகும். இந்தநிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், சமூக வலைத்தளங்களில் ஒருவரை மற்றொருவர் அன் - பாலோ செய்ததாகவும் கூறினால் உங்களால் நம்ப முடியுமா...? ஆனால், இது உண்மை என்று கூறப்படுகிறது.
கடந்த 2019 ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்த தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா நம்பமுடியாத வகையில் 5 சதங்களை அடித்து அசத்தினார்.
விராட் அணி - ரோகித் அணி:
2019 உலகக் கோப்பை தோல்வியை தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் பரவியது. தொடர்ந்து, கடந்த 2021 ம் ஆண்டு இறுதியில் இந்திய அணியின் ஒருநாள் போட்டியில் இருந்து கோலி நீக்கப்பட்டதற்கு ரோகித்தும் ஒரு காரணமும் என்று கூறப்பட்டது.
கோலிக்கும், ரோகித்துக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் இந்திய அணி அந்த செய்திகளி தவிர்த்து வந்தது. ஆனால் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், தனது 'கோச்சிங் அப்பால்' புத்தகத்தில், விராட் அணி மற்றும் ரோகித் அணி என இந்திய அணிக்குள் இரண்டு பிரிவுகள் இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வந்த கருத்து வேறுபாடு:
இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தனது 'கோச்சிங் அப்பால்: மை டேஸ் வித் தி இந்திய கிரிக்கெட் டீம்' என்ற புத்தகத்தில், அப்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரோகித் மற்றும் விராட் இருவரையும் அழைத்து இந்த பிரச்சனையை சரிசெய்தார் என எழுதியுள்ளார்.
அதில், “2019 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு, எங்கள் டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்றும், அரையிறுதியில் நியூசிலாந்திடம் நாங்கள் தோற்றப்போது என்ன நடந்தது என்பது குறித்தும் பல மோசமான செய்திகள் அப்போது வந்தது. இந்திய அணிக்குள் விராட் அணி மற்றும் ரோகித் அணி என இரண்டு பிரிவுகள் இருந்ததாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. யாரோ ஒரு வீரர் சமூக வலைத்தளங்களில் மற்றொருவரைப் பின்தொடரவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலைமை மட்டும் சரிசெய்யப்படவில்லை எனில் அது பெரிய பிரச்சனையாகிவிடும் என்று எங்களுக்கு தெரியும்.
இதையடுத்து, உலகக் கோப்பை முடிந்து சுமார் 10 நாட்களுக்குப் பிறகு லாடர்ஹில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்காக நாங்கள் அமெரிக்காவில் (யுஎஸ்) வந்தோம். வந்தவுடன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்த முதல் காரியங்களில் ஒன்று, விராட் மற்றும் ரோகித்தை தனது அறைக்கு அழைத்து, இந்திய கிரிக்கெட் ஆரோக்கியமாக இருக்க, இருவரும் ஒரே அணியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் என்ன நடந்தாலும், என்ன பேசினாலும் பரவாயில்லை, ஆனால் நீங்கள் இருவரும் மூத்த கிரிக்கெட் வீரர்கள், எனவே உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை கலைக்க வேண்டும்.
இந்த கருத்து வேறுபாட்டை நீங்கள் பின்னுக்குத் தள்ளி, இந்திய அணி முன்னேறுவதற்கு ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என தெரிவித்ததாக ஸ்ரீதர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.