Virat Kohli BCCI: இந்திய கிரிக்கெட் அணியை மறுகட்டமைப்பு செய்ய, பிசிசிஐ பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

தடுமாறும் இந்திய அணி:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்றதை தொடர்ந்து, சர்வதேச போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. குறிப்பாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்தது மற்றும் பார்டர் கவாஸ்கர் தொடரை 3-1 என இழந்தது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால், அணியை மறுகட்டமைப்பு செய்ய பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக, விராட் கோலியின் கேப்டன் பதவிக் காலத்தில் உடற்தகுதி தேர்வுகளில் இருந்த, பழைய விதிகளை மீண்டும் கொண்டு வர ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. வீரர்களின் பணிச்சுமை மற்றும் பயணத்தின் அதிர்வெண் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாய யோ-யோ உடற்தகுதி தேர்வை வாரியம் நீக்கியது. ஆனால், இந்த விதிகளை மீண்டும் கொண்டு வரலாம் என்று பிசிசிஐ ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் யோ-யோ டெஸ்ட்:

 வெளியாகியுள்ள தகவல்களின்படி, ”கடினமான கால அட்டவணையின் காரணமாக காயத்தைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, வீரர்களை தேர்வு செய்ய உடற்தகுதி அளவுகோலை கவனத்தில் கொள்ளுமாறு மருத்துவக்குழுவிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது” என கூறப்படுகிறது.  காயங்களின் எண்ணிக்கையைக் குறைக்க யோ-யோ டெஸ்ட் நடைமுறையை  முந்தைய நிர்வாகம் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த நடவடிக்கைகளை மீண்டும் கொண்டு வர பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தெரிகிறது. 

இதுதொடர்பான தகவலில், "வீரர்கள் பெரும்பாலும் போட்டிகளுக்கான பயணத்தில் இருப்பதால் போர்டு அவர்கள் மீது மெத்தனமாக நடந்துகொண்டது. காயத்தைத் தடுப்பதில் கவனம் செலுத்தியது. இதை சில வீரர்கள் இலகுவாக எடுத்துக் கொண்டனர். எனவே, ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சி நிலை அளவுகோல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்” என பிசிசிஐ பரிசீலிப்பதாக  கூறப்படுகிறது.

இதர மாற்றங்கள் என்ன?

அணி செயல்படும் விதத்தில் மேலும் சில மாற்றங்களைச் செய்ய பிசிசிஐ விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, வெளிநாடு சுற்றுப் பயணங்களின் போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும்  மனைவிகள் விரர்களுடன் தங்குவதும் கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக வெளிநாட்டுப் பணிகளின் போது குடும்பத்தினர் கலந்து கொள்வது வீரர்களின் கவனத்தை திசை திருப்பும் மற்றும் அவர்களின் செயல்திறனை பாதிக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும், அனைத்து வீரர்களும் எப்போதும் அணியுடன் பயணிக்க வேண்டும் என்ற விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் சமீபத்திய ஆண்டுகளில் சில வீரர்கள் தனித்தனியாக பயணம் செய்ய விரும்புவது பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்கிறது, இது குழு ஒருங்கிணைப்பு மற்றும் அணியின் ஒழுக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் என்று பிசிசிஐ கருதுகிறது.