RSA Women Cricket Team Salary: கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத அணிகளில் தென் ஆப்ரிக்க அணியும் ஒன்று. இந்த அணிக்கு தென் ஆப்ரிக்கா மட்டுமில்லாது மற்ற நாடுகளிலும் கணிசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. சிறந்த அணியாக இருந்தாலும், இந்த அணியால் உலகக்கோப்பை இதுவரை எட்ட முடியாத சோகம் இன்றுவரை உள்ளது. இதெல்லாம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியைப் பற்றியது என்றாலும், அந்த அணியின் நிர்வாகம் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு அந்நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடும் வீராங்கனைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


அதாவது அந்த அணி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ள அறிவிப்பின்படி, அந்நாட்டு ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட்டில் பெறும் போட்டிக்கான தொகையை போலவே பெண்கள் அணிக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த அறிவிப்பின்போது தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம், இந்த அறிவிப்பானது பணம் சார்ந்தது அல்ல, பாலினச் சமத்துவம் சார்ந்தது என தெரிவித்துள்ளது. 


ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிகரான சம்பளத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வரிசையில் மூன்றாவது அணியாக தென் ஆப்ரிக்க அணி இணைந்துள்ளது. ஐசிசி போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத் தொகையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடன்கங்கள் இதனை விமர்சித்தாலும், சர்வதேச அளவில் இன்னும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான சம்பளம் வழங்காத நாடுகளுக்கு மத்தியில் தென் ஆப்ரிக்க அணி இந்த முன்னெடுப்பை எடுத்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். 


தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள இந்த சம்பளம் தொடர்பான அறிவிப்பானது தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணி அடுத்து விளையாடவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்தே நடைமுறைக்கு வரவுள்ளது. பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 


இந்த அறிவிப்பிற்கு முன்னர் வரை தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிக்கு 269 டாலர்களும், டி 20 போட்டியில் 134 டாலர்களும் சம்பளமாக பெற்று வந்தன. இந்நிலையில் சம்பளம் உயர்தப்பட்டுள்ளதால், ஆண்கள் அணியைப்போலவே தென் ஆப்ரிக்க மகளிர் அணி ஒருநாள் போட்டிக்கு இந்திய மதிப்பில், ரூபாய் 87 ஆயிரமும், டி20 போட்டிக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 58 ஆயிரமும் சம்பளமாகப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.