தோனியின் யோசனைகளுக்கு ஏற்ப 2011 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக பிசிசிஐ முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ராஜா வெங்கட் தெரிவித்துள்ளார். 


2011ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பை -2023 போட்டியை நடத்துகிறது என்பது அனைவரும் அறிந்ததே. 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதேபோல், இந்தாண்டும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


ஆசிய கோப்பை 2023 கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்படும் என்று தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்தார். ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்தும் நிலையில், 2011 உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை. 


ரோஹித் சர்மாவை வேண்டாமென்று கூறியது தோனிதான் என்று பிசிசிஐ முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ராஜா வெங்கட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ அன்றைய தினம் உலகக் கோப்பை அணியை தேர்வு செய்ய நாங்கள் அனைவரும் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தோம். அணியில் மொத்தம் 15 பேர் இடம்பெற வேண்டும். நாங்கள் 1 முதல் 14 வரை சுமூகமாக அனைவரையும் தேர்ந்தெடுத்துவிட்டோம். அதனை தொடர்ந்து, பதினைந்தாவது வீரராக ரோஹித் சர்மாவை குறிப்பிட்டோம்.


அப்போது இது சரியான முடிவு என்று அன்றைய இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், கேப்டன் எம்.எஸ்.தோனி எங்கள் கருத்துக்கு உடன்படவில்லை. ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பியூஷ் சாவ்லா வேண்டும் என்று வலியுத்தினார். அவ்வளவுதான் கேரி கிர்ஸ்டனும் உடனே வார்த்தை மாற்றி ’ஆம்! அதுவே சிறந்த தேர்வு ‘ என்றார். 


மனவேதனை அடைந்த ரோஹித் சர்மா:


தொடர்ந்து பேசிய அவர், “அன்றைய தினம் அணியில் இடம் கிடைக்காமல் ரோஹித் சர்மா மிகுந்த வேதனையில் இருந்தார். பியூஸ் உலகக் கோப்பையில் விளையாடிய மூன்று போட்டிகளில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆரம்பத்தில் மிட் ஆர்டரில் விளையாடிய ரோஹித்தை தொடக்க ஆட்டக்காரராக மாற்றிய பெருமை தோனியையே சாரும் என்று நான் சொல்ல தேவையில்லை” என கூறினார். 


 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில், அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி தனது பயணத்தை தொடங்குகிறது.