இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் தனது அறையை ஆக்கிரமித்த வீடியோவை சமீபத்தில் பதிவேற்றம் செய்து, இணையத்தில் பகிரப்பட்ட ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.


கோலி அறையின் விடியோ


அடிலெய்டு ஓவலில் பங்களாதேஷுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் கூட்டத்தில், ஹோட்டல் அறை வீரர்கள் பாதுகாப்பையும் தனியுரிமையையும் உணர விரும்பும் இடம் என்று டிராவிட் கூறினார். மேலும் கோலி முழு பிரச்சினையையும் கையாண்ட விதத்திற்காகவும் பாராட்டினார். விராட் கோலி தங்கியிருந்த அறையில் அவர் இல்லாதபோது உள்ளே நுழைந்து அவரது டேபிளில், வார்ட்ரோபில் என்னென்ன இருக்கிறது என்பதை காண்பிக்கும்படியான வீடியோ ஒன்றை ஒருவர் எடுத்து வெளியிட்டிருந்தார். வைரலான அந்த விடியோவை வெளியிட்ட விராட் கோலி, "என் மீது இருக்கும் பாசம் எல்லாம் சரி தான். ஆனால் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட இடங்கள் உண்டு. அதனை மதிக்க வேண்டும். எங்களையும் ஒரு மனிதராக பாருங்கள், உங்களை மகிழ்விக்கும் போகப்பொருளாக பார்க்காதீர்கள்", என்று காட்டமான பதிவை வெளியிட்டிருந்தார். 



மன்னிப்பு கேட்ட ஹோட்டல்


இந்த சம்பவத்தை கோலி கடுமையாக சாடிய உடனேயே, பெர்த்தில் அணி தங்கியிருந்த கிரவுன் பெர்த் ஹோட்டல் மன்னிப்பு கேட்டது. "சம்பந்தப்பட்ட எங்களது விருந்தினரிடம் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக இருப்பதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்போம்" என்று ஆஸ்திரேலிய ஹோட்டல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த இஸ்ட் மறக்காம ஃபாலோ பண்ணுங்க..


டிராவிட் கருத்து


இந்த சம்பவம் குறித்து பேசிய ராகுல் டிராவிட், "பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் இன்னிங்ஸ் அற்புதமானது. ஹரிஸ் ரவுஃபுக்கு எதிரான அவரது இரண்டு சிக்ஸர்கள் மிகவும் அற்புதமானது," என்று அவர் கூறினார். மேலும், "அறையில் இருக்கும்போதுதான் உற்றுநோக்கும் கண்களிலிருந்து விலகி இருக்க முடியும். பாதுகாப்பையும் தனியுரிமையையும் அப்போதுதான் உணர முடியும், அங்கேயும் ஊடகங்கள் மூக்கை நுழைப்பது சரியான விஷயம் அல்ல. இதனை விராட் கோலி எதிர்கொண்ட விதம் மிகவும் அருமையானது," என்று டிராவிட் கூறினார்.






விராட் கோலியின் உலகக்கோப்பை ஃபாரம்


நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சில முக்கியமான ரன்களை குவித்து சிறந்த வீரராக விளங்கி வருகிறார் கோலி. அங்கு பாகிஸ்திகானுடனான பரபரப்பான ஆட்டத்தில் 53 பந்துகளில் 82* ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக கோஹ்லி அடித்ததை டிராவிட்டும் பாராட்டினார். குறிப்பாக 19வது ஓவரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப்பின் பந்துவீச்சில் அவர் அடித்த இரண்டு சிக்ஸர்களைப் பாராட்டினார். இதற்கிடையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கோஹ்லி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா நவம்பர் 18 முதல் நியூசிலாந்தில் மூன்று டுவென்டி 20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா தலைமை வகிக்கிறார். 50 ஓவர் ஆட்டங்களுக்கு ஷிகர் தவான் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.