உடல் எடையை குறைப்பது என்பது இலகுவான விடயம் அல்ல, நாம் நோன்பு இருப்பது போன்று கட்டுப்பாடுகளுடன் இருந்தால் மட்டுமே உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் மற்றும் கலோரிகள் குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.


அதிக புரதச்சத்து கொண்ட உணவு, அதேபோல் குறைந்த கொழுப்பு உணவு, நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை உட்கொண்டாலே உடல் வெகு விரைவில் இழைத்து விடும். ஆனால் இவற்றை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் உடல் எடை குறைப்பின் போது, உடலில் சோர்வு, ஆற்றலின்மை போன்றன ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


உடலில் உள்ள அதிக கலோரிகளை வெளியேற்ற கடின உடற்பயிற்சிகளை செய்யலாம் அல்லது உட்கொள்ளும் உணவில் கலோரி குறைந்தவற்றை எடுத்துக் கொள்ளலாம் . இருந்த போதும் இவற்றை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே ஒரு ஆரோக்கியமான உடல் எடை குறைப்பை நாம் செய்யலாம். அதிகளவான காய்கறிகள் பழ வகைகள் ,பழச்சாறுகளை எடுத்துக் கொள்வது உடல் எடை குறைப்பின் போது ஏற்படும் சோர்வு, சக்தியின்மை போன்றவற்றை நீக்கி சுறுசுறுப்புடன் இயங்கச் செய்யும்


கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்த்து, ஊட்டச்சத்து மிக்க உணவுகளுடன் போதுமான உடற்பயிற்சியை செய்யும் போது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும். 


பொதுவாகவே கொரோனா தொற்றுக்கு பின்னர் பெரும்பாலானோர் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட தொடங்கி விட்டார்கள் என்றே கூற வேண்டும் .ஆரோக்கியமான, ஒரு கட்டுக்கோப்பான உடலை பெற உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகள் , ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, உடல் எடை குறைப்பு இயல்பாகவே  நடைபெறும். ஆகவே உடற்பயிற்சி மற்றும் போதுமான அளவு கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்  ஆரோக்கியமான முறையில் உடல் எடையை நாம் குறைத்துக் கொள்ளலாம்.


 உலர் விதைகள் (ட்ரை ஃப்ரூட்ஸ்):


சிப்ஸ் ,வெஜ் பர்கர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதற்கு பதிலாக உடல் எடை குறைப்பின் போது, இடையிடையே ஏற்படும் பசியினை போக்க இந்த உலர் விதைகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


பசியினை கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்ட சிறிய அளவு வேர்கடலை, ஒரு சில பாதாம், வால்நட், சூரியகாந்தி விதை ,பிஸ்தா போன்றவற்றை உண்ணலாம். இந்த உலர் விதைகளில் அதிகளவான விட்டமின் ஈ, புரதம், செலினியம் மெக்னீசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை வழங்குகிறது.


சியா விதைகள்: 


சப்ஜா எனப்படும் சியா விதைகளில் ஏராளமான தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. இமெதுவானதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது


 அதேபோல் இந்த சியா விதை ஆனது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது . இது உடல் எடை குறைப்பிற்கு மிகவும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறந்த செரிமான தன்மையை கொண்டுள்ள இந்த சியா விதைகள்  பல்வேறு மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. தினமும் இரண்டு ஸ்பூன் சியா விதைகளை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்


ஆப்பிள்கள்:


ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளை உண்பது வாழ்நாள் முழுவதும் மருத்துவரை தள்ளி வைப்பதற்கு சமன் என கூறப்படுகிறது. அளவான கலோரியையும், நார்ச்சத்தையும் கொண்ட ஆப்பிள் எடை குறைப்பிற்கு மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நாள்தோறும் உண்ணும் துரித உணவுகளை தவிர்த்து, ஆப்பிளை எடுத்துக்கொண்டால் பசியின்மையை தக்க வைத்துக் கொள்ளும்‌.


தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வரும்போது வயிறும் நிரம்பும் ,அதே போல் உடல் எடையும் குறைய தொடங்கும். இந்த ஆப்பிள்கள் உடலில் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரித்து எடை இழப்பிற்கு உதவுகிறது.


முட்டைகள்:


அதிகளவான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுதான் இந்த முட்டையாகும் .அதிலும் நாட்டுக்கோழி முட்டை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முட்டையை காலை உணவாக எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்குகிறது. உடல் எடை குறைப்பின் போது சோர்ந்து போகாமல் சுறுசுறுப்புடன் வைக்கிறது. ஆரோக்கியமான புரதத்தை கொண்ட இந்த முட்டைகளை காலை நேர உணவுக்கு பதிலாக நாம் எடுத்துக் கொள்ளலாம். நாட்டுக்கோழி முட்டையை தொடர்ந்து காலை உணவாக நாம் எடுத்துக் கொள்ளும் போது, நாள் முழுதும் பசி ஏற்படாதவாறு அதில் நிறைந்திருக்கும் புரதம் உடலை கட்டமைத்து விடும். வேறு எந்த உணவுகளிலும் இல்லாத விட்டமின்கள் ,தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்து காணப்படுகின்றன.


கருப்பு சாக்லேட்:


டார்க் சாக்லேட்டில் அதிக அளவிலான மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது உடலில்  வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் ,கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. சற்று கசப்புத் தன்மை மிக்க இந்த டார்க் சாக்லேட்டுகளை சாப்பிடுவது இன்சுலின் சுரப்பை உடலில் சமன் செய்கிறது. அதேபோல் உடல் எடை குறைப்பின் போது இடைக்கிடையே ஏற்படும் பசியை இந்த டாக் சாக்லேட் நீக்கி , அதிக அளவிலான உணவுகளை எடுத்துக் கொள்ளாதவாறு செயலாற்றும்.


ஆகவே நாள்தோறும் தேவையான அளவு உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு முறைகளை மட்டுமே கடைப்பிடித்தால் உடல் எடையை விரைவில் குறைத்துவிட முடியும். அசைவ உணவுகளில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது என்பதை யாவரும் அறிவோம். ஆனால் இயற்கையாக கிடைக்கும் காய்கறி, பழ வகைகளில் குறைந்த அளவே கொழுப்பு சத்து இருக்கிறது .இவற்றை நாள் தோறும் எடுத்துக் கொள்ளும் போது உடலினுள் அவை திறம்பட செயலாற்றி உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும். இந்த ஆரோக்கியமான காய்கறி பழ வகைகளை எடுத்துக் கொள்ளும் போது நீண்ட காலத்திற்கு தொற்று நோய்களிலிருந்து நம் உடலை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.