இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி ஆடும் டி20 போட்டிகளில் மட்டும் அவர் பங்கேற்பதில்லை. ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடி வருகிறார்.
கேப்டன்சியை விரும்பாத ரோகித் சர்மா:
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடி வரும் நிலையில் அவர் கேப்டன்சியை ஏற்றுக் கொண்ட நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமாகிய சவ்ரவ் கங்குலி மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் சவ்ரவ் கங்குலி அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “ ரோகித் சர்மா கேப்டன்சியை வேண்டாம் என்றார். ஏனென்றால், அனைத்து வடிவ போட்டிகளிலும் ஆடும்போது அதிக அழுத்தம் இருக்கும். அவரிடம் நான் நீங்கள் ஆம் என்று மட்டும் சொல்லுங்கள் நான் அறிவித்துவிடுகிறேன் என்றேன். தற்போது அவர் இந்திய அணியை வழிநடத்திச் செல்வதையும், அதனால் கிடைக்கும் முடிவுகளையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
பயிற்சியாளர் பொறுப்பில் ஆர்வம் காட்டாத டிராவிட்:
அதேபோல, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கத் தயங்கியதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கங்குலி கூறியிருப்பதாவது, “ அவருக்கும் இளம் குடும்பம் உள்ளது. அவருக்கு இரண்டு இளம் மகன்கள் உள்ளனர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் விளையாடியுள்ளார். அவர் பெரும்பாலான நேரங்களை வெளியிலே செலவிட்டுள்ளார். அதனால், பயிற்சி அளிப்பது அவ்வளவு எளிதல்ல.
ஆனாலும், அவர் இந்திய கிரிக்கெட்டிற்காக ஒப்புக்கொண்டார். அவர் எதிர்காலத்திலும் தொடர்வார் என்று நம்புகிறேன். ஏனென்றால், ஒரு பயிற்சியாளருக்கு போதியளவு நேரம் நாம் கொடுக்க வேண்டும். மூன்று, நான்கு, 5 மாதங்களில் அவர் மாற்றத்தை கொண்டு வர இது ஒன்றும் மந்திரம் இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
கேப்டன்சியில் அசத்தும் ரோகித்:
ரவி சாஸ்திரிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டனாகிய ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, தோனிக்கு பிறகு மூன்று வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது கேப்டன்சியை ராஜினாமா செய்த விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கங்குலிக்கும் அவருக்கும் இடையே நடந்த பிரச்சினை காரணமாக அவர் கேப்டன்சி பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன்பின்பு, இருவரும் இதுதொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவுட் ஆஃப் பார்ம், கேப்டன்சி விவகாரத்திற்கு பிறகு விராட் கோலி ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கடந்தாண்டு நடந்த ஆசியக் கோப்பைத் தொடர் மூலம் மீண்டும் பேட்டிங்கில் கம்பேக் அளித்தார்.
மேலும் படிக்க: SA vs AFG, Innings Highlights: தொடக்கத்தில் சொதப்பிய ஆஃப்கான்; தனிநபராக போராடிய ஒமர்சாய்; தென்னாப்பிரிக்காவுக்கு 245 ரன்கள் இலக்கு
மேலும் படிக்க: World Cup 2023: அதிகரிக்கும் கிரிக்கெட் மோகம்... 450 மில்லியன் பார்வைகளை கடந்த உலகக்கோப்பை தொடர்..