உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் அனைத்து அணிகளும் தற்போது தங்களது கடைசி லீக் போட்டிகளை விளையாடி வருகின்றது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் நான்காவது அணியாக நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதால், இன்று முதல் அதாவது நவம்பர் 10ஆம் தேதி முதல் நடைபெறும் அனைத்து போட்டிகளும் அட்டவணைப்படி நடைபெறுமே தவிர, தொடரில் தாக்கத்தினை ஏற்படுத்தாது. 


இந்நிலையில்ன் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. போட்டியின் முதல் 8 ஓவர்கள் மட்டும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு நிம்மதியாக இருந்தது. அதாவது 8 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் 9வது ஓவர், 10வது ஓவர் மற்றும் 11வது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை இழக்க, போட்டி அதன் பின்னர் முழுக்க முழுக்க தென்னாப்பிரிக்கா பக்கம் சாய்ந்தது. 


அஃப்கானிஸ்தான் அணி தரப்பில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது கடைசி லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு பலத்தினை ஏற்படுத்த நினைத்து களமிறங்கினாலும், தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளுவதில் மிகவும் குறிக்கோளாக கூட்டு முயற்சியில் ஈடுபட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


தென்னாப்பிரிக்கா அணியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஆஃப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் தொடங்கி மிடில் ஆர்டர் வரை தங்களது விக்கெட்டினை சொற்ப ரன்களில் இழந்து வெளியேறியதால், ஆஃப்கானிஸ்தான் அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஆனது. அதேநேரத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக ஓவருக்கு  நான்கு ரன்கள் ஆவரேஜ் ஸ்கோரை தொடர்ந்து அடித்து வந்தனர். 


அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணி மிகவும் இக்கட்டான சூழலில் இருந்தபோது களமிறங்கிய  ஒமர்சாய் மட்டும் நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடி ரன்கள் சேர்த்தார். மிகவும் பொறுப்புடன் விளையாடிய ஒமர்சாய் தனது அரைசதத்தினை 71 பந்தில் எட்டி, தொடர்ந்து விளையாடினார். இவரின் நிதானமான ஆட்டத்தினால் ஆஃப்கானிஸ்தான் அணி 200 ரன்களை கடக்க உதவியது. போட்டி 40 ஓவர்களைக் கடந்த பின்னர் நூர் தனக்கு கிடைத்த பந்துகளை சிறப்பாக பவுண்டரிக்கு விரட்டினார். 


இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்தது. இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் இந்த போட்டியில் மட்டும் மொத்தம் 6 கேட்ச்சுகள் பிடித்தார். சிறப்பாக விளையாடி 97 ரன்கள் சேர்த்த ஒமர்சாய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரினை எட்டினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஒமர்சாய் 107 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். அதேபோல் தென்னாப்பிரிக்காவின் அதிவேகப் பந்து வீச்சாளர் கோட்ஸீ 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவர் அதிகபட்சமாக மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.