இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஜோடி இன்னும் இரண்டு ரன்கள் எடுத்தால் உலக சாதனை படைக்கவுள்ளனர். 


கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் பல்வேறு சாதனைகள் தனித்தனி வீரர்களாக படைத்துள்ளனர். அதேபோல், அணியாகவும் சாதனைகள் படைத்துள்ளனர். அதேபோல் இரு வீரர்கள் ஜோடியாக இணைந்தும் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மா இருவரும் இணைந்து இதுவரை 4 ஆயிரத்து 998 ரன்கள் சேர்த்துள்ளனர். 


இவர்கள் இருவரும் இணைந்து இன்னும் இரண்டு ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸில் விரைவாக 5 ஆயிரம் ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனைப் படைக்கும். இந்த ஜோடி இதுவரை 85 இன்னிங்ஸ்களில் 62.47 சராசரியுடன் 4998 ரன்களை எடுத்துள்ளது. இவர்கள் இந்த ரன்களை எடுக்கும் போது  மொத்தம் 18 சதங்கள் மற்றும் 15 அரை சதங்களை மொத்தமாக அடித்துள்ளனர். 


 மேற்கிந்தியத் தீவுகள் அணியின்  கார்டன் கிரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஜோடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த ஜோடி என்ற சாதனை படைத்ததில் முதல் இடத்தில் உள்ளனர். இவர்கள் இந்த சாதனையை 97 இன்னிங்ஸ்களில் படைத்துள்ளனர்.


இவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான்களான மேத்யூ ஹைடன் - ஆடம் கில்கிரிஸ்ட் இருவரும் இணைந்து 104 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான திலகரத்ன தில்ஷான் - குமார் சங்ககரா ஜோடி 105 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியுள்ளனர். 




ஒட்டுமொத்த எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜோடிகளின் அடிப்படையில் கோலி-ரோஹித் ஜோடி  8வது இடத்தில் உள்ளனர். சச்சின் தெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஜோடி 8227 ரன்கள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 22) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்த மைல் கல்லை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால் ஆட்டம் வேறுமாதிரி அமைந்து விட்டது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்ச் ஆக, இது இந்திய அணியின் முதல் விக்கெட்டாக அமைந்தது. அதன் பின்னர் விராட் கோலி களமிறங்கியதால் இவர்கள் இருவரும் இணைந்து இந்த சாதனையை இந்த போட்டியில் படைக்க முடியாமல் போய்விட்டது. அதேபோல், இந்த போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் இழந்தது.  


இதன் பின்னர், ஐபிஎல் போட்டி அதன் பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி இருப்பதால், இருவரும் வரும் காலங்களில் இந்த சாதனையைப் படைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.