Suryakumar Yadav Golden Duck: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து கோல்டன் டக்-அவுட் ஆகியுள்ளார். இது அவருக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் ஆஸ்தான அணியாக இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணியின் முக்கியமான வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடிய காரணத்தால், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இந்தியாவில் இதுவரை சர்வதேச போட்டியில் களமிறங்கிய வீரர்களை விட மிகவும் வித்தியாசமான ஆட்டத்திறனைக் கொண்டுள்ள வீரர் என புகழப்பட்ட சூர்யகுமார் யாதவ், மைதானத்தின் 360 டிகிரியிலும் பவுண்டரிகளை பறக்கவிடும் ஆற்றல் கொண்டவர். ஆனால் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக மூன்று ஒருநாள் போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மூன்று போட்டியிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக்- அவுட் ஆகி வெளியேறியுள்ளார். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிட்ஷெல் ஸ்டார்க் பந்தில் எல்.பி.டபள்யூ ஆகி முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல், வெளியேறினார். மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் சர்வதேச அரங்கில் தொடர்ந்து மூன்று முறை கோல்டன் டக் ஆகிய வீரராக சூர்யகுமார் யாதவ் உள்ளார். மிட்ஷெல் ஸ்டார்க் மற்றும் ஆடம் ஜம்பா என இருவரும் இடது கை பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தகது.
மேலும், கடந்த 10 போட்டிகளுக்கு மேலாகவே சூர்யகுமார் யாதவ் சரியாக விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரின் பர்ஃபாமன்ஸ் மிகவும் மோசமாக இருந்தது. அவரது ஆட்டம் குறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், அவர் சந்தித்த மூன்று பந்துகளையும் அவர் பேட்டில் எதிர்கொள்ளவில்லை.
மிகவும் போராடி தனக்கான இடத்தினை இந்திய அணியில் ஏற்படுத்திய சூர்யகுமார் யாதவ் சமீபகால ஆட்டங்களின் மூலம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். மிகவும் நம்பிக்கையுடன் களமிறங்கி அணிக்கு வழு சேர்க்கும் திறன் கொண்ட சூர்யகுமார் யாதவின் கான்ஃபிடன்ஸ் எல்லாம் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகிவிட்டதா என யோசிக்கும் அளவிற்கு அவரது பர்ஃபாமன்ஸ் இருக்கிறது.
எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் இப்படியான பார்ம்-அவுட் சூழல்களை எதிர்கொண்டும், அதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியும் அதன் பின்னர் தனது மிகச் சிறந்த கம்பேக்கை கொடுத்துள்ளனர். அதிலும், சமீபத்தில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரன் மிஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கொடுத்த கம் பேக் அவருக்கு மட்டுமான கம்பேக் கிடையாது. அது அணிக்கான கம்பேக் என கூறும் அளவிற்கு இருந்தது. அப்படியான கம்பேக் கொடுப்பாரா சூர்யகுமார் யாதவ் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.