கிரிக்கெட் விளையாட்டு தொடக்க காலத்தில் டெஸ்ட் போட்டிகளாகத்தான் நடந்தது. அதன் பின்னர் வீரர்கள் சோர்வு, ரசிகர்களின் ஆர்வம் ஆகியவற்றை மனதில் வைத்து ஒருநாள் போட்டி நடத்தப்பட்டது. அதாவது 60 ஓவர் கிரிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த 60 ஓவர் கிரிக்கெட் 50 ஓவர் போட்டிகளாக மாற்றப்பட்டது. இதன்ல் பின்னர் நீண்ட காலத்திற்கு 50 ஓவர் போட்டிகள்தான் இருந்தது. ஒரு கட்டத்தில் கிரிக்கெட் போட்டியில் கார்ப்ரேட் நிறுவனங்களில் ஆதிக்கம் மெல்ல மெல்ல ஓங்கியதாலும், ரசிகர்களின் ஆர்வமின்மையாலும் டி20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது.  தற்போது இரு நாட்டுகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் அதிகப்படியாக நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து டி10 போட்டிகள் குறித்தும் பல்வேறு நாட்டின் கிரிக்கெட் போர்டுகள் யோசித்து வருகின்றது.


என்னதான் ரசிகர்களை கவர போட்டிகளின் ஓவரை குறைத்துக்கொண்டு வந்தாலும், கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஒரு கிரிக்கெட் வீரரை ஆகச்சிறந்த வீரர் என எடைபோட முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதுதான். என்னதான் 50 ஓவர் போட்டி, டி20 போட்டிகளில் ஒருவர் தலைசிறந்த வீரராக இருந்தாலும் அனைத்து வீரர்களும் முயற்சி செய்வது ரெட் பால் கிரிக்கெட் எனப்படும் டெஸ்ட் கிரிக்கெட்தான். 


இன்றைய கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் அணி என்றாலே எதிரணிகளுக்கு அல்லு விடும் அளவிற்கு மிகவும் பலமான அணியாக உள்ளது. தொடக்க காலத்தில் அதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறிய பின்னர் பல ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணி ஒரு வெற்றியை ஒரு போட்டியில் பெருகின்றது அல்லது தோல்வியைத் தவிர்க்கின்றது  அதாவது டிரா செய்கின்றது என்றாலே அது முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. 


இப்படியான நிலையில் கடந்த 1959ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆண்கள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்கள் சேர்த்தது. இதில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் பட்டேல் 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 


இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிதான் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியாகும். இந்த நிகழ்வு 1959ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்றது.  


அதேபோல் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி ஆஸ்திரேலியா கிரிக்கெட் மகளிர் அணியை கடந்த 24ஆம் தேதி அதாவது டிசம்பர் 24ஆம் தேதி முதல் முறையாக வென்றுள்ளது. இந்திய ஆண்கள் அணியும் இந்திய மகளிர் அணியும் ஒரே தேதியில் அதாவது டிசம்பர் 24ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளது.