டி 20 உலகக்கோப்பை தொடருக்கு பின்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தநிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது டி போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் 6ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் 7ஆவது ஓவரில் இஷான் கிஷன் 29 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதேபோல் ரிஷப் பண்ட்டும் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடந்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதன்பின்பு இந்திய அணியின் ரன்விகிதம் சற்று குறைந்தது. குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனால் 17 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி சற்று அதிரடி காட்ட முயன்றது. குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து ஒரளவு நம்பிக்கை அளித்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய தீபக் சகார் கடைசி ஓவர் வீசிய மில்னே ஓவரில் 19 ரன்களை குவித்தார். அந்த ஓவரில் தீபக் சகார் அடித்த ஒரு சிக்ஸ் லாக் ஆன் திசையில் 95 மீ தூரம் பறந்தது. இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தீபக் சகாரை நோக்கி சல்யூட் அடித்தார். தற்போது இதுகுறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்