இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கே 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆட இருக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி வருகிற 16 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிற்கு பறக்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் லிமிட்டெட் ஓவர் போட்டிகளின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் ஆடமாட்டார் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும், ஓடிஐ தொடரில் ஆடுவதுமே சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது.
ரோஹித் சர்மாவிற்கு இப்போது 34 வயதாகிறது. கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் வீரர்களுக்கு ஃபிட்னஸ் பிரச்சனையும் ஃபார்ம் அவுட் பிரச்சனையும் இந்த சமயத்தில் அதிகமாகவே எழும். ரோஹித்தை பொறுத்தவரைக்கும் அவர் பெரிதாக ஃபார்ம் அவுட்டெல்லாம் ஆகவில்லை. சிறப்பாகவே ஆடிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் பிசிசிஐ அவருக்கு கேப்டன் பதவியையும் வழங்கியிருக்கிறது. ஆனால், ஃபிட்னஸ் என்பதில் ரோஹித் சர்மாவிற்கு பிரச்சனைகள் இருக்கிறது. அடிக்கடி காயமடைந்து போட்டிகளை தவறவிட்டுக் கொண்டிருக்கிறார்.
2020 லாக்டவுணுக்கு பிறகு இந்திய வீரர்கள் முதல்முதலாக ஐ.பி.எல் தொடரிலேயே ஆடினர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியே சாம்பியன் ஆகியிருந்தது. ஆனால், அந்த சீசனின் அத்தனை போட்டிகளிலும் ரோஹித்தால் ஆடியிருக்க முடியவில்லை. காயமடைந்திருந்தார். கடைசிக்கட்டங்களில் ரோஹித்திற்கு பதில் சில போட்டிகளில் பொல்லார்ட் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.
இந்த காயம் குணமடையாததால் அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரிலும் பெரும்பாலான போட்டிகளில் ரோஹித் சர்மாவால் ஆட முடியாமல் போனது. ஓடிஐ மற்றும் டி20 தொடரில் ரோஹித் முழுமையாக ஆடாமல் போயிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடாமல் கடைசி இரண்டில் மட்டுமே ஆடியிருப்பார்.
அடுத்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான உள்ளூர் மற்றும் வெளியூர் தொடரில் காயங்களின்றி முழுமையாக ஆடினார். ஆனால், அதன்பிறகு நடைபெற்ற முதல் 2021 சீசன் இரண்டாம் பாதி ஐ.பி.எல் போட்டியின் முதல் போட்டியிலேயே ஆடாமல் இருந்தார்.
உலகக்கோப்பையில் ஆடிய ரோஹித், நியுசிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரில் டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவிட்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வெடுத்திருப்பார். ஓய்விலிருந்து திரும்பியவர் இப்போது தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக மீண்டும் காயமடைந்திருக்கிறார். டெஸ்ட் தொடரில் ஆடப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஓடிஐ போட்டிகளில் ஆடுவாரா என்பது சந்தேகமே.
கடந்த ஒன்றரை ஆண்டில் இந்திய அணியில் அதிகமாக காயத்தால் அவதிப்பட்ட வீரராக ரோஹித்தே இருந்திருக்கிறார். இப்போது லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு கேப்டன் ஆக்கப்பட்டிருப்பதால் இந்த காயங்கள் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, பிசிசிஐ ரோஹித்தை 2023 உலகக்கோப்பையை மனதில் வைத்தே கேப்டன் ஆக்கியிருந்தது. இடையில் 2022 இல் ஒரு டி20 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இந்நிலையில், ரோஹித் இப்படி அடிக்கடி காயமடைவது ஐ.சி.சி தொடர்களின் போதும் அவர் காயமடைந்தால் என்ன செய்வது என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித்தை பொறுத்தவரைக்கும் அவர் 3 ஃபார்மட்களிலும் ஆடும் வீரராக இருந்தாலும் லிமிடெட் ஓவர் போட்டிகளே அவருக்கான களம். டெஸ்ட் போட்டிகளில் கடந்த இங்கிலாந்து சீரிஸில்தான் அணிக்குள் அவரின் இடத்தையே உறுதி செய்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரைக்கும் ஓப்பனிங்கில் அவர் இடத்தை நிரப்ப எக்கச்சக்க வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் அவரின் இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் நிரப்பி விட முடியாது. லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியை பெற்றிருப்பதால் அவருக்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது. தாங்கள் ஸ்பெசலிஸ்ட்டாக இருக்கும் ஃபார்மட்டில் 100% உடல்தகுதியுடன் நீண்டகாலம் ஆட வேண்டுமெனில் பெரும்பாலான வீரர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஃபார்மட்டில் ஓய்வு பெற்றுவிடுவார்கள். ரோஹித்தை பொறுத்தவரை அவர் ஒரு லிமிட்டெட் ஓவர் ஸ்பெசலிஸ்ட். அந்த ஃபார்மட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டுக்கொடுப்பாரா?