ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டி20 போட்டிகளிலின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியே விலகிய நிலையில், ஓடிஐ போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து அவரை பிசிசிஐ நீக்கியுள்ளது. இனி, இந்திய அணியை பொறுத்தவரைக்கும் ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவும் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியும் கேப்டன்களாக செயல்படுவர்.


பிசிசிஐ யின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இது சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புதான். ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன்பாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த செய்தியை முதன் முதலாக வெளியிட்டது. அதாவது, கோலியை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக வைத்துக் கொண்டு ரோஹித் சர்மாவை லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு கேப்டன் ஆக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. பிசிசிஐ தரப்பிலிருந்து இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. உடனே கோலியின் ரசிகர்கள் அந்த செய்தி நிறுவனத்தை இணையத்தில் சகட்டுமேனிக்கு வசைபாடினர். ஆனால், அந்த செய்தி மற்றும் பிசிசிஐயின் மறுப்பு வெளியான நான்கே நாட்களில் 'பணிச்சுமை காரணமாக டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்' என கோலியே அறிக்கை வெளியிட்டார். செய்தி நிறுவனத்தின் மீது கண்ணை மூடிக்கொண்டு பாய்ந்து கொண்டிருந்த ரசிகர்கள் கப்சிப் என அமைதியாகி சோகமாகினர்.




விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று ஐ.சி.சி தொடர்களில் சொதப்பியிருந்தது (சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தவிர்த்து). 2017 சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோற்றிருந்தது. 2019 உலகக்கோப்பையில் அரையிறுதியில் நியுசிலாந்திடம் தோற்றிருந்தது. இந்த ஆண்டு ஜுன் மாதத்தில் ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் தோற்றிருந்தது. இத்தோடு ஐ.பி.எல் லிலும் கோலியின் பெங்களூரு அணி தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டிருந்தது. நாக் அவுட் போட்டியில் சரியான நேரத்தில் மிகத்தவறான முடிவை எடுத்து கோலி சொதப்பிக் கொண்டே இருந்தார். இந்தியா கடைசியாக 2013 ஆம் ஆண்டுதான் ஒரு ஐ.சி.சி தொடரை வென்றிருந்தது. அதன்பிறகு, இந்திய அணியால் எந்த தொடரையும் வெல்ல முடியவில்லை. பிசிசிஐ எதிர்பார்த்த ரிசல்ட்டை கோலியாலும் வழங்க முடியவில்லை. இதனால் பிசிசிஐ க்குமே கோலியின் கேப்டன்சி மீது அதிருப்தி உண்டானது. மேலும், சமீபமாக அணித்தேர்விலும் பிசிசிஐக்கும் கோலிக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. இவையெல்லாம் சேர்ந்தே பிசிசிஐ வேறொரு கேப்டன் குறித்து யோசிக்க வைத்தது. இந்த சமயத்தில்தான் கோலியே முன் வந்து டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.


கோலியின் இந்த முடிவுமே சில சர்ச்சைகளை கிளப்பியது. பணிச்சுமை காரணமாக டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். ஆனால், ஓடிஐ டெஸ்ட் போட்டிகளை ஒப்பிடும்போது ஒரு ஆண்டில் டி20 போட்டிகள் சொற்ப அளவிலேயே நடைபெறும். அதிலிருந்து விலகுவதால் பெரிதாக எந்த பணிச்சுமையையும் இறக்கி வைத்ததாக கருத முடியாது. பிசிசிஐ தாமாக முன் வந்து ஓடிஐ மற்றும் டி20 கேப்டன் பதவியை பறிப்பதற்கு முன்பாக கோலியே முன்வந்து டி20 பதவியை மட்டும் விட்டுக்கொடுத்து ஓடிஐ கேப்டன்சியை பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறார் என செய்திகள் வெளியாகியிருந்தது.




2023 ஓடிஐ உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அந்த தொடர் வரை கேப்டனாக இருந்து இந்தியாவில் வைத்து தனது தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே கோலியின் விருப்பம்.  ஆனால், கோலியின் ஐ.சி.சி ரெக்கார்டுகளை முன்வைத்து பிசிசிஐ இந்த ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையை கோலி வென்றிருந்தால் அவருக்கு இன்னொரு வாய்ப்பாக அவர் எதிர்பார்ப்பதை போல 2023 உலகக்கோப்பை வரை கேப்டன் பதவியை கொடுக்கலாம் என பிசிசிஐ எண்ணியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அதன்பொருட்டு தோனி இந்த தொடரின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். முன்னாள் வீரர் ஒருவர் இப்படி இந்திய அணிக்குள் ஒரு தொடருக்கு மட்டும் ஆலோசகராக வருவது இதுதான் முதல் முறை. இதுவே கோலிக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இந்த டி20 உலகக்கோப்பையிலும் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கே செல்லாமல் மிக மோசமாக தோற்று வெளியேறியது. தொடர்ச்சியாக, கேப்டன் கோலியின் தலைமையில் ஐ.சி.சி தொடர்களில் இந்தியா சந்தித்த நான்காவது தோல்வி இது. பிசிசிஐ இதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. டி20 அணியின் புதிய கேப்டனான ரோஹித்தையே ஓடிஐ போட்டிகளுக்கும் கேப்டனாக்கிவிட பிசிசிஐ முடிவெடுத்தது. டி20 உலகக்கோப்பைக்கு பிறகு நடைபெற்ற நியுசிலாந்துக்கு எதிரான முதல் டி20 தொடரில் ரோஹித்தே கேப்டனாக செயல்பட்டார். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்தியா ஓடிஐ போட்டியில் ஆடவிருக்கிறது. அதற்கு முன்பாக புதிய கேப்டனை அறிவிக்க வேண்டும் என்பதற்காக ரோஹித்தையே கேப்டனாக அறிவித்துவிட்டார்கள்.




கோலி கேப்டன் பதவியில் விமர்சனங்களை சமாளித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், ஐ.பி.எல் இல் மட்டும் ரோஹித் 5 கோப்பைகளை மும்பை அணிக்காக வென்று கொடுத்திருந்தார். இதுவே பிசிசிஐ க்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது. ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்தது. இந்த சமயத்தில் கேப்டன்சி & பேட்டிங் என இரண்டிலுமே கோலி தடுமாற சரியான நேரம் பார்த்து பிசிசிஐ ரோஹித்தை கேப்டனாக்கிவிட்டது.


டெஸ்ட் போட்டிகளில் கோலி அசைக்க முடியாத ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலகம் சுற்றி தொடர்களை வெல்கிறது. இதனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை.


இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காகவே பிசிசிஐ இப்படி ஒரு கடினமான முடிவை எடுத்திருக்கிறது. பிசிசிஐ எதிர்பார்க்கும் ரிசல்ட்டை உலகக்கோப்பையை ஹிட்மேன் வென்று கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.