இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.  இவர் 63 பந்துகளில் சதத்தினை எட்டியுள்ளார்.  அதேபோல் ரோகித் சர்மா உலகக் கோப்பை போட்டிகளில்ம் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அதேபோல் கிறிஸ் கெயிலின் சாதனையாக இருந்த அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் முறியடித்துள்ளார்.  அதேபோல் உலகக் கோப்பைப் போட்டிகளில் மட்டும் 7 சதங்கள் விளாசியுள்ளார். 


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புள்ளிப்பட்டியலுல் 4வது இடத்தில் உள்ள இந்தியாவும் 9வது இடத்தில் உள்ள ஆஃப்கானிஸ்தானும் இன்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி மோதிக் கொண்டன. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பந்து வீசியது. ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து  272 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 10 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 4விக்கெட்டுகள் கைப்பற்றினார். 


அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முதல் சில ஓவர்களில் மட்டும் நிதானம் காட்டியது. அதன் பின்னர் இந்திய அணியின் வேகத்தினை ஆஃப்கானிஸ்தான் அணியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாச, அருண் ஜெட்லி மைதானமே ஆரவாரத்தில் குழுங்கியது. இவருக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் தனது விக்கெட்டினை 47 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 


அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அதிவேக இரண்டாவது அரைசதம் விளாசினார். அதைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 63 பந்துகளில் தனது சதத்தினை எட்டினார். இதனால் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 84 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ரோகித் சர்மா மட்டும் 16 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசினார். 


ரோகித் சர்மா விக்கெட்டினை இழந்த பின்னர் இந்திய அணியின் ரன் வேட்டை சரியத் தொடங்கியது. விராட் கோலி மற்றும் ஸ்ரேயஷ் ஐயர் கூட்டணி மேற்கொண்டு விக்கெட்டினை இழக்க விடாமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை நகர்த்திச் சென்றனர். இறுதியில் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன்  மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி 55 ரன்களும் ஸ்ரேயஸ் ஐயர் 25 ரன்களும் எடுத்திருந்தனர். 


இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முறியடித்த சாதனைகள்


உலகக் கோப்பை போட்டியில் அதிவேகமாக 1000 ரன்கள் விளாசிய இந்திய வீரர் (19 போட்டிகள்)


உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் - 63 பந்துகள்


உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதம் விளாசிய வீரர் - 7 சதங்கள் இதுவரை விளாசியுள்ளார். 


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் - 473 போட்டிகளில் 556 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.