2024ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 19 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. இதில் 15 வீரர்கள் முன்னணி வீரர்களாகவும் 4 வீரர்கள் காத்திருப்பு வீரர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து கிரிக்கெட் ரசிகர்களும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் முன்னாள் இந்திய வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு ஊடககங்கள் தமிழ்நாடு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதை மிகவும் அழுத்தமாக கேள்வி எழுப்பியிருந்தது. அதேபோல் தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் கூட தமிழ்நாட்டினைச் சேர்ந்த நடராஜனை கட்டாயம் அணியில் சேர்த்திருக்கவேண்டும் என கூறியிருந்தனர். அதேபோல் ரிங்கு சிங் காத்திருப்பு பட்டியலில் இல்லாமல் 15 பேர் கொண்ட அணியிலேயே இருந்திருக்க வேண்டும் எனவும் கே.எல் ராகுலுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை எனவும் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூட்டாக மும்பையில் பேட்டி அளித்தனர். அதில் அவர்கள் பேசிவற்றில் முக்கியமானவற்றை இங்கு காணலாம்.
- கே.எல். ராகுல் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாடி வருகின்றார். நமது அணிக்கு மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர்தான் தேவைப்படுகின்றது. அதனால்தான் கே.எல். ராகுல் தேர்வு செய்யப்படவில்லை. அதேநேரத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் எங்கு களமிறக்கினாலும் அவர்களால் விளையாட முடியும் - அஜித் அகர்கர்.
- நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். இதனால் ஐபிஎல் தொடரில் ஹர்திக் கேப்டன்சியில் விளையாடுவதில் எந்த சிரமும் இல்லை. இது கிரிக்கெட் வீரர்களின் வாழ்வில் ஒரு பகுதிதான். அணிக்கு தேவைப்படுவதை கடந்த ஒருமாதமாக நான் நல்லபடியாக செய்துவருவதாக நம்புகின்றேன் - ரோகித் சர்மா
- அணியை தேர்வு செய்யும்போது கட்டாயம் அணிக்கு கேப்டன் அவசியம். ரோகித் சர்மா ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இருந்து இதுவரை சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். அதனால்தான் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா சில டி20 தொடர்களுக்கு கேப்டனாக செயல்பட்டிருந்தாலும், ரோகித் சர்மாவைவின் பங்களிப்பை தட்டிக்கழிக்கமுடியாது. மேலும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிப்பதில் தேர்வுக்குழுவிற்கு எந்த அழுத்தமும் இல்லை - அஜித் அகர்கர்.
- கடந்த காலங்களில் மூன்றுவகை கிரிக்கெட்டிற்கும் நாங்கள் முன்னுரிமை கொடுத்து வந்தோம். அதேநேரத்தில் வீரர்களும் அதற்கேற்றவாரு கால இடைவெளி எடுத்து விளையாடினார்கள். இதில் பல வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த அணியை தேர்வுக்குழு, பயிற்சியாளர்கள் விவாதித்துதான் தேர்வு செய்துள்ளனர் - ரோகித் சர்மா
- உலகக்கோப்பைக்கான அணித் தேர்வை ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை வைத்து எடுக்கவில்லை. நாங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பிருந்தே உலகக்கோப்பைத் தொடருக்கான அணித் தேர்வு குறித்து விவாதித்து வந்துள்ளோம். அதனால் ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஆட்டத்தை வைத்து இந்திய அணியை தேர்வு செய்யவில்லை - அஜித் அகர்கர்
- நாங்கள் இதுவரை நியூயார்க்கில் விளையாடியது இல்லை. அங்கு பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து எந்தவிதமான ஐடியாவும் இல்லை. அங்கு சென்று பார்த்த பின்னர்தான் ஆடுகளத்தை கணித்து அதற்கேற்ற வீரர்களை களமிறக்க முடியும். ஏற்கனவே நமது அணியில் டாப் அர்டர் சிறப்பாகவே உள்ளது. மிடில் ஆர்டரில் அதிரடியான ஆட்டத்தினை ஐபிஎல் தொடரிலும் அதற்கு முன்னரும் வெளிப்படுத்திவரும் சிவம் துபேவை அதனால்தான் அணியில் எடுத்துள்ளோம் - ரோகித் சர்மா
- துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் குறித்து பெரிதாக கவலைப்படவேண்டியது இல்லை. அவர் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் களத்திற்கு வந்துள்ளார். கடந்த ஒருமாதமாக சிறப்பாகவே விளையாடி வருகின்றார். ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாடும்வரை நேரம் உள்ளது. அதற்குள் அவர் தனது பழைய ஃபார்முக்கு வந்துவிடுவார் - அஜித் அகர்கர்.
- அணியில் ரிங்கு சிங் மற்றும் சுப்மன் கில் இல்லாதது குறித்து அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கேப்டன் அதிகப்படியான பவுலர்கள் வேண்டும் என கூறுகின்றார். அதனால்தான் ரிங்குவும் கில்லும் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் உள்ளனர். இந்த முடிவை எடுப்பதற்கு எங்களுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. என்னதான் இருந்தாலும் முதலில் 15 பேர் கொண்ட அணியைத்தான் நாம் தேர்வு செய்தாக வேண்டும் - அஜித் அகர்கர்
- நான் இதுகுறித்து ரொம்பவும் வெளிப்படையாக பேச விரும்பவில்லை. எதிரணியின் கேப்டன்களும் நான் பேசுவதை கூர்ந்து கவனித்து வருவார்கள். ஒரு கேப்டனாக எனக்கு அணியில் கூடுதலான சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். போட்டிகள் காலையில் 10 முதல் 10.30 மணிக்கு தொடங்கும் எனபதால் அதுகுறித்தும் யோசிக்க வேண்டும். அணியை இவ்வாறு தேர்வு செய்ததற்கான காரணத்தை நான் அமெரிக்காவில் சொல்கின்றேன் - ரோகித் சர்மா
- விராட்கோலியின் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாகவே உள்ளது. அவர் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தினையே வெளிப்படுத்தி வருகின்றார் - அஜித் அகர்கர்
- ஹர்திக் பாண்டியாவும் சிவம் துபேவும் சிறப்பாகவே இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். சிவம் துபே இந்த ஐபிஎல் தொடரில் பவுலிங் போடும் வாய்ப்பினைப் பெறவில்லை. ஹர்திக் மட்டும் சிவம் துபே என இருவரிடமும் இருந்து நாங்கள் பவுலிங் எதிர்பார்க்கின்றோம் - ரோகித் சர்மா
- வாஷிங்டன் சுந்தர் அதிகப்படியான போட்டிகளில் விளையாடவில்லை. அதேநேரத்தில் அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேலை ஒப்பிடுகையில், மிடில் ஆர்டரில் களமிறங்கி அக்ஷர் பட்டேலால் சிறப்பாக செயல்பட முடியும் என நினைக்கின்றோம். இடது கை ஸ்பின்னர்கள் அணியில் இருப்பது கூடுதல் பலமாக கருதுகின்றேன். மேலும் அக்ஷர் பட்டேல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார் - ரோகித் சர்மா