உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தொடர்ந்து புயல்போல் அதிவேகமாக ரன்களை குவித்து வருகிறார். இந்த உலகக் கோப்பை 2023ல் நிதானம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காமல் சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார் ரோஹித் சர்மா. இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா இதுவரை இந்த உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் 55.89 சராசரியில் 1 சதத்துடன் 503 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாதான். சிக்ஸர் அடிப்பதில் மற்ற பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மாவுக்கு பக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்று கீழே காணலாம்.
ரோஹித் சர்மாவை சுற்றி பட்டியலில் யாரும் இல்லை..
இந்த ஆண்டில் இதுவரை ரோஹித் சர்மா 60 சிக்சர்களை அடித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இந்த பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சுப்மன் கில் இதுவரை 38 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த வகையில் ரோஹித் சர்மாவுக்கும் சுப்மான் கில்லுக்கும் இடையே 22 சிக்ஸர்கள் வித்தியாசம் உள்ளது.
இதை தொடர்ந்து, 23 சிக்சர்களுடன் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி 22 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். அதாவது, சிக்ஸர் அடிப்பதில் மற்ற பேட்ஸ்மேன்களை விட ரோஹித் சர்மா மிகவும் முன்னிலையில் இருக்கிறார் என்பதை தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி:
அதே சமயம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த உலக கோப்பையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி தாங்கள் விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்திய அணி 9 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. இப்போது இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.