நியூசிலாந்து சுற்றுப்பயணம்
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 50 ஓவர்களில் சுப்மன் கில்லின் இரட்டை சதத்துடன் 349 ரன்கள் குவித்த போதும் போராடியே வெற்றி பெற்றது.
இன்று 2வது போட்டி
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணியும், தொடரை இழக்கக்கூடாது என நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டி வருகிறது.
டாஸ் வென்ற ரோகித்:
போட்டிக்காக டாஸ் போட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நியூசிலாந்தி அணியின் கேப்டன் லாதம் ஆகியோர் மைதானத்திற்கு வருகை தந்தனர். கமெண்ட்ரி பாக்ஸில் இருந்த ரவி சாஸ்திரி அறிவிக்க, போட்டியின் ரெஃப்ரி ஜவகல் ஸ்ரீநாத் முன்னிலையில் ரோகித் சர்மா நாணயத்தை சுண்டினார். லாதம் தலை என சொல்ல, நாணயத்தில் பூ விழுந்தது.
தலையை சொறிந்த ரோகித்
இதையடுத்து, ரோகித் சர்மாவிடம் பேட்டிங்கா? பவுலிங்கா? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ”அது வந்து நாங்கள் என்ன செய்ய போகிறோம்... என்ன செய்ய போகிறோம் என்றால்..” என சற்று நேரம் தலைமீது கை வைத்து யோசிக்க தொடங்கி விட்டார். இதனால் லாதம் மட்டுமின்றி, அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த சக இந்திய வீரர்களும், அங்கு நடப்பதை கண்டு சிர்த்து விட்டனர். பின்னர் ஒரு வழியாக ”பந்துவீச.. ஆமாம் நாங்கள் பந்துவீச போகிறோம்” என ரோகித் சர்மா உறுதிப்படுத்தினார்.
தடுமாறும் நியூசிலாந்து:
ரோகித் சர்மாவின் இந்த செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் ரோகித் சர்மாவை கிண்டலடித்தும், நகைச்சுவையாக மீம்ஸ் போட்டும் வருகின்றனர். இதனிடையே, முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 15 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த, பிலிப்ஸ் மற்றும் பிரேஸ்வெல் நிதானமாக விளையாடினர். ஆனால், பிரேஸ்வெல்லும் 22 ரன்கள் எடுத்திருந்த போது, ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில், ஷமி 3 விக்கெட்டுகளையும், சிராஜ், தாகூர் மற்றும் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.