கொரோனா தொற்றிலிருந்து ரோஹித் சர்மா முழுமையாக மீண்டுள்ளதாகவும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் அவர் விரைவில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தனிமைப்படுத்திக் கொண்ட ரோஹித்


இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக்  கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்டில் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.




இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.


இந்நிலையில், தற்போது ரோஹித் சர்மா கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து மீண்டுள்ள ரோஹித் சர்மா இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


15 ஆண்டுகள் நிறைவு


இந்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவைப்படுவதால் அவர் டி20 பயிற்சி ஆட்டத்தில் விளையாட மாட்டார் என மூத்த பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பதினைந்து ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக தன் ரசிகர்களுக்குக் கடிதம் எழுதிய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, அதைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.


அந்தக் கடிதத்தில்,  “இது என்ன மாதிரியான ஒரு பயணம், நிச்சயமாக இதனை என் வாழ்நாள் முழுவதும் நான் நேசிப்பேன். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும், நான் இன்றைய நிலையில் இருக்கும் விளையாட்டு வீரராக மாற உதவிய நபர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.


 






இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டனாக தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி இந்தாண்டு 11 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 


உலககோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து டி20 போட்டிகளில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.