இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து போன்ற அனுபவம் வாய்ந்த அணியை இளம் வீரர்களின் பட்டாளத்துடன் எதிர்கொண்டது இந்திய அணி. விராட் கோலி மற்றும் முகமது ஷமி போன்ற அனுபவ வீரர்கள் முழு தொடரிலும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 


அதேசமயம் ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமை காரணமாகவும், கே.எல். ராகுல் காயம் காரணமாகவும் ராஞ்சி டெஸ்டில் இருந்து வெளியேறினர். இருப்பினும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமலும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கெல்லாம் காரணம் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிதான். 


கேப்டனாக சாதனை படைத்த ரோஹித் சர்மா: 


 ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இதுவரை 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றிக்கு பிறகு, ரோஹித் சர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளினார். ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. அதேசமயம், இந்த வெற்றிக்கு பிறகு, முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை ரோஹித் சர்மா சமன் செய்தார். சுனில் கவாஸ்கர் கேப்டனாக 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற 6வது இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். 


இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில், மகேந்திர சிங் தோனியின் தலைமையில், இந்திய அணி 27 டெஸ்ட் போட்டிகளிலும்,  சவுரவ் கங்குலி தலைமையில் 21 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


அனுபவம் இல்லா இந்திய அணி:


ராஞ்சி டெஸ்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார் ஆகாஷ்தீப். அதேபோல், ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய டெஸ்ட் அணிக்காக சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூடல் ஆகியோர் அறிமுகமானார்கள். 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜூரல், ராஞ்சியில் நடைபெற்ற 4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் எடுத்தார். 


முதல் இன்னிங்சில், ஜூரல் இந்தியா 300 ரன்களை கடந்ததற்கு முக்கிய பங்களிப்பை அளித்தார். இதன்பிறகு, இரண்டாவது இன்னிங்ஸில் 39* ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்தியா முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு ஜூரல் அற்புதமான இன்னிங்ஸை செயல்படுத்தினார். பின்னர் இரண்டாவது இன்னிங்சில் உறுதியாக நின்று அணியை வெற்றிக் கோட்டை கடப்பதில் முக்கிய பங்காற்றினார். ஜூரெலுடன் இணைந்து, இளம் வீரர் சுப்மன் கில் அரைசதம் அடித்து இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தார். 


கலக்கும் ஜெய்ஸ்வால்:


இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் நான்கு போட்டிகளி இரண்டு இரட்டை சதங்கள்,  இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் அதிக ரன் குவித்தவர் யஷஸ்வி. 4 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் 93.57 சராசரியுடன் 655 ரன்கள் எடுத்துள்ளார்.