கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிவரை சென்ற இந்திய அணி தோல்வி அடைந்தது. இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  இச்சூழலில் தான் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சியாட் விருது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு வழங்கப்பட்டது. 


ஆதரவாக இருந்த மூன்று பேர்:


இதில் கலந்து கொண்ட அவர் டி20 உலகக் கோப்பையில் வெற்றி குறித்து ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதில்,"இந்திய அணி வீரர்கள் சுதந்திரமாக விளையாடக் கூடிய சூழலை உருவாக்க முடிந்தது. அதுதான் இந்திய அணியின் தேவையாகவும் இருந்தது.


டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கும், இந்திய அணியின் மனநிலையை மாற்றியதற்கும் 3 பேர் எனக்கு ஆதரவாக இருந்தனர். அது ஜெய் ஷா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் தான். ஏனென்றால் அவர்கள் இல்லாமல் என்னால் தனியாக எந்த முடிவையும் எடுத்திருக்க முடியாது. அதேபோல் இந்திய அணி வீரர்கள் யாரையும் மறக்கவே முடியாது. ஒவ்வொரு முறை சிக்கல் வந்த போதும், ஒவ்வொரு வீரர்களும் முன் வந்து இந்திய அணி பக்கம் ஆட்டத்தை திருப்பினர். இதன் காரணமாகவே சாம்பியன் பட்டத்தை வென்றோம்" என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். 


ஒவ்வொரு நாளும் உணர முடியும்:


தொடர்ந்து பேசிய அவர்,"11 ஆண்டுகளுக்கு பின் முதல் ஐசிசி கோப்பையை வென்ற பின் வந்த மகிழ்ச்சியை சொல்லவே முடியாது. அந்த உணர்வை நம்மால் ஒவ்வொரு நாளும் உணர முடியும்.  நீண்ட காலமாக நாம் ஐசிசி கோப்பைக்காக காத்திருந்திருக்கிறோம். உலகக்கோப்பையை வென்ற போது, அனைவருக்கும் மிகமுக்கியமான கொண்டாட்டமான நேரமாக அமைந்தது.


நாங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே கோப்பையை வைத்து கொண்டாடியது. டி20 உலகக்கோப்பையுடன் இந்தியாவில் நடந்த கொண்டாட்டத்தை பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது. அந்த மகிழ்ச்சியை என்னால் இப்போதும் வெளிப்படுத்த முடியவில்லை. டி20 உலகக்கோப்பைக்கு பின், அடுத்ததாக 2 முக்கியமான சுற்றுப்பயணம் உள்ளது" என்றார்.