இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நேற்று விலகியுள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2014-ஆம் ஆண்டு முதல் சுமார் 7 ஆண்டுகள் விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். 


இந்நிலையில் விராட் கோலியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனான ரோகித் சர்மா ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.  அதில், “இந்த முடிவு எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதற்கு என்னுடைய பாராட்டுகள். உங்களுடைய அடுத்த நிலைக்கு என்னுடைய வாழ்த்துகள் ” எனப் பதிவிட்டுள்ளார். 






இதேபோல் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் அவர்களுடைய ரெக்கார்டு மூலம் அறியப்படுவார்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய பதவிக்காலத்தில் செய்த சில முக்கியமான மாற்றங்களால் பல காலம் பேசப்படுவீர்கள். வெற்றி என்பது பல ஆண்டுகாலம் விதைதை விதைகளின் முடிவுகளாக இருக்கும். 






அந்தவகையில் நீங்கள் விதைத்த விதைகளின் மூலம் ஒரு  பெரிய நிலையை அடைந்துள்ளீர்கள். உங்களுடைய கேப்டன்சியிலிருந்து நான் கற்று கொண்டது ஒன்று தான். அதாவது கேப்டன் பதவியிலிருந்து விலகும் போது அணியை ஒரு உயரமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அடுத்து வருபவர் அந்த இடத்திலிருந்து அணியை மேலே கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் அது” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: 2017ல் தோனி கூறியதை பின்பற்றுகிறாரா கோலி? விலகலுக்கு காரணம் என்ன?