1983 ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடுத்த தலைவராக சவுரவ் கங்குலிக்கு பதிலாக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவராக ராஜீவ் சுக்லாவும், செயலாளராக ஜெய்ஷாவும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.  அக்டோபர் 18ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக மும்பையில் பிசிசிஐயின் உள் கூட்டத்தில் இந்த விவாதங்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகின. 


கபில்தேவ் தலைமையிலான 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி, பிசிசிஐ தலைவர் பதவிக்கு செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வார். பிசிசிஐ நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.


இதற்கிடையில், மூத்த நிர்வாகி ராஜீவ் சுக்லா வாரியத்தின் துணைத் தலைவராக நீடிப்பார் என்றும், அருண் சிங் துமாலுக்குப் பதிலாக ஆஷிஷ் ஷெலர் புதிய பொருளாளராகப் பதவியேற்பார் என்றும் தெரிகிறது.


ரோஜர் பின்னி : 


67 வயதான ரோஜர் பின்னி கடந்த 1979-87 வரை டெஸ்ட் போட்டிகள் விளையாடி 47 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதேபோல், 1980-87 வரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். 


அதிலும், முக்கியமாக 1983 உலகக் கோப்பையில் ரோஜர் பின்னி 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தினார். (சிறந்த பந்துவீச்சு 4-29) இதையடுத்து உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரோஜர் பின்னி படைத்தார். 


இந்திய கட்டுப்பாட்டு வாரிய தேர்தல்:



  • தேர்தல் - அக்டோபர் 18ம் தேதி

  • வேட்புமனு பரிசீலனை - அக்டோபர் 13ம் தேதி

  • வேட்புமனு வாபஸ் - அக்டோபர் 14ம் தேதி


பிசிசிஐக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்:



  • பிசிசிஐ தலைவர் -ரோஜர் பின்னி

  • செயலாளர் - ஜெய் ஷா

  • துணை தலைவர் - ராஜீவ் சுக்லா

  • பொருளாளர் - ஆஷிஷ் ஷெலர்

  • இணைச் செயலாளர் - தேவஜித் சைகியா

  • ஐபிஎல் தலைவர் - அருண் துமால்