பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனராக சேர்ந்துள்ளார். இந்த நிலையில், விளையாட்டு நாளிதழ் ஒன்றிற்கு சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், ரிஷப்பண்ட் வரவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதற்கு பதிலளித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப்பண்ட். விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப்பண்ட் கடந்தாண்டு இறுதியில் உத்தரகாண்டில் நடைபெற்ற கார்  விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப்பண்டிற்கு அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது.


ரிஷப்பண்ட் ஆடமாட்டார்:


இதனால் இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரில் அவர் இடம்பெறவில்லை. மேலும், விரைவில் நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் ரிஷப்பண்ட் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷப்பண்ட் ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.


இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சவ்ரவ் கங்குலி ஐ.பி.எல். தொடரில் ரிஷப்பண்ட் ஆடுவாரா..? இல்லையா..? என்று பதிலளித்துள்ளார். தனியார் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “வரும் ஐ.பி.எல். தொடர் சிறப்பாக இருக்கும். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். ஆனால், ரிஷப்பண்ட் காயம் டெல்லி கேபிடல்சை பாதித்துள்ளது. ரிஷப்பண்ட் வரும் ஐ.பி.எல். தொடரில் ஆடமாட்டார்.” என்று கூறியுள்ளார்.


ஆஸ்திரேலிய தொடர்:


விபத்தில் சிக்கிய ரிஷப்பண்டிற்கு முழங்கால், மூட்டு, முதுகுப்பகுதிகளில் கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் விபத்தில் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டவசமான ஒன்றாக கருதப்படுகிறது. ஐ.பி.எல். தொடர் மட்டுமின்றி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா தொடரிலும் அவர் ஆடமாட்டார் என்று கருதப்படுகிறது.


இளம் வீரரான ரிஷப்பண்ட் ஆடாத காரணத்தால் அவருக்கு பதில் மாற்று கேப்டனை தேர்வு செய்ய டெல்லி அணி தீவிரம் காட்டி வருகிறது. ரிஷப்பண்டின் சிகிச்சைக்கான செலவை பி.சி.சி.ஐ.யே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. ரிஷப்பண்ட் ஐ.பி.எல். தொடரில் ஆடாவிட்டாலும் அவருக்கான தொகை வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IND vs SL, 1st ODI: 98 ரன்னில் அவுட்டான இலங்கை கேப்டன்; அப்பீலை திரும்பக்கேட்டு சதம் அடிக்கவிட்டு அழகு பார்த்த இந்திய கேப்டன்..!


மேலும் படிக்க: IND vs AUS: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு..இந்திய அணிக்கு இந்த தொடர் ரொம்ப முக்கியம்... ஏன் தெரியுமா?