இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. 


இதில் சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 66 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஒரே டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம் கடந்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் 57 ரன்களுக்கு ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். 


ஆசியாவிற்கு வெளியே ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த  இந்திய விக்கெட் கீப்பர்கள்:


203 (146 & 57) ரிஷப் பண்ட் v இங்கிலாந்து (எட்ஜ்பாஸ்டன்) (2022)


161 விஜய் மஞ்ச்ரேக்கர் v வெஸ்ட் இண்டீஸ் (கிங்ஸ்டன்) (1954)


இதன்மூலம் ஆசியாவிற்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 1954ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விஜய் மஞ்ச்ரேக்கர் ஒரே டெஸ்டில் 161 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை 68 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.


ஒரே டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம் கடந்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:
ஃபரூக் எஞ்சினியர்- 121 & 66 (மும்பை)(1973)
ரிஷப் பண்ட்- 146 & 57*(எட்ஜ்பாஸ்டன்)(2022)


இதற்கு முன்பாக 1973ஆம் ஆண்டு ஃபரூக் எஞ்சினியர் மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 121 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 66 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு பின்பு தற்போது ரிஷப் பண்ட் இரண்டாவது விக்கெட் கீப்பராக இந்தச் சாதனையை படைத்துள்ளார். 


ஒரே டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:


230 (192 & 38) புத்தி குந்திரேன் v இங்கிலாந்து (சென்னை) (1964)
224 (224 & பேட்டிங் செய்யவில்லை) தோனி v ஆஸ்திரேலியா (சென்னை) (2013)
203 (146 & 57) ரிஷப் பண்ட் v இங்கிலாந்து (எட்ஜ்பாஸ்டன்) (2022)
187 (121 & 66) ஃபரூக் எஞ்சினியர் v இங்கிலாந்து மும்பை (1973)


உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி 361 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண