இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் படுகாயமடைந்தார். நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்த அவருக்கு, முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 


ரிஷப் பண்டிற்கு ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர், கிரிக்கெட் விளையாட நீண்ட காலம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி (நேற்று) தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒரு பயிற்சி ஆட்டத்தின்போது பண்ட் பேட்டிங் செய்யும் வீடியோ வெளியானது. தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில் #Rishabhpant என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறது. 






அந்த வீடியோவில், பண்ட் தனது பேட்டிங்கின்போது சில பந்துகளை அதிரடியாக அடித்து எல்லைக்கு வெளியே அனுப்பினார். கிட்டதட்ட 8 மாதங்களுக்கு மேலாக ஓய்வில் இருந்த அவர், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 


முன்னதாக, ஒருநாள் உலகக் கோப்பை அணியில் பண்ட் விளையாடுவார் என்ற நம்பிக்கை இல்லை. இப்படியான சூழ்நிலையில் பண்ட் வேகமாக குணமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடலாம். 






2022 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்றது. இந்த தொடரில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பிடித்தார். டிசம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்த இரண்டாவது டெஸ்டில், ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 93 ரன்கள் எடுத்தார். ரிஷப் பந்த் இதுவரை இந்திய அணிக்காக 33 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 43.67 சராசரியில் 2271 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 34.6 சராசரியில் 865 ரன்களும், டி20யில் 22.43 சராசரியில் 987 ரன்களும் எடுத்துள்ளார்.


கார் விபத்து: 


வங்கதேசத்திற்கு எதிரான சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, டிசம்பர் 30 அன்று அதிகாலை 5.30 மணியளவில் ரூர்க்கியின் நர்சன் எல்லையில் ஹம்மத்பூர் ஜால் அருகே தண்டவாளத்தில் பண்டின் கார் மோதியது. இந்த விபத்திற்குப் பிறகு, கார் தீப்பிடித்து எரிந்தது, விபத்தில் பண்ட் பலத்த காயமடைந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த விபத்திற்கு பிறகு பண்ட்டின் முழங்கால் மற்றும் கணுக்கால் தசைநார் கிழிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.