ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக கூறப்படுகிறது.


டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்:


கடந்த 2022 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கினார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட். அதனால் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித கிரிக்கெட்டிலும் விளையாடமல் இருந்தார். பின்னர்,ஐபிஎல் சீசன் 17ல் மீண்டும் களம் இறங்கினார். அதனைத்தொடர்ந்து டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணியில் இடம் பெற்றார்.


இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை அணி வீரருமான எம்.எஸ்.தோனியுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். இதனால் டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது என் சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால், இதனை ரிஷப் பண்ட் மறுத்தார்.


எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவேன்?


இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில், ஒருவேளை மெகா ஏலத்திற்கு வந்தால், நான் வாங்கப்படுவேனா? அல்லது வாங்கப்பட வாய்ப்பில்லையா? அல்லது எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவேன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.




ஏனெனில் ஏற்கனவே டெல்லி அணி அவரை ரீடெயின் செய்யும் என்று பேசிவந்த வேளையில் திடீரென அவர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டதால் அவர் ஏலத்திற்கு வருவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஒருவேளை அப்படி அவர் மெகா ஏலத்திற்கு வரும் பட்சத்தில் நிச்சயம் சிஎஸ்கே அணி அவரை பெரிய தொகை கொடுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.