Rishabh Pant IND Vs SA A:  இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான பயிற்சி டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement

இந்தியா - தென்னாப்ரிக்கா பயிற்சி டெஸ்ட்

இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகள் தற்போது இரண்டு போட்டிகள் அடங்கிய,  அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் பெங்களூருவில் நடைபெற்று வரும், இரண்டாவது போட்டி இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக உருவெடுத்துள்ளது. நீண்ட காயத்திலிருந்து மீண்டு, ரெட்-பால் கிரிக்கெட்டுக்குத் திரும்பிய ரிஷப் பண்ட், மீண்டும் காயமடைந்துள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது, பண்ட் பலமுறை காயமடைந்தார்.

ரிஷப் பண்ட் காயம்:

முதலில் ஹெல்மெட்டிலும், பின்னர் அவரது கையிலும், மூன்றாவதாக அவரது வயிற்றிலும் பந்து தாக்கியது. மொரேகி வீசிய ஒரு பந்தை கீப்பரின் தலைக்கு மேலே அடிக்க முயன்ற போது, பந்து அவரது ஹெல்மெட்டின் மீது பலமாக தாக்கியது. பின்பு பந்தை இடதுபுறமாக தட்டிவிட முயன்றபோது கையில் பட்டது. மூன்றாவது முறையாக ஸ்ட்ரோக் வைக்க முயன்றபோது, பேட்டை கடந்து உள்ளே நுழைந்த பந்து, பண்டின் வயிற்றில் வேகமாக பட்டது. இதனால் காயத்தால் அவதிப்பட்ட ட்ரம்பிற்கு மருத்துவக் குழு முதலுதவி அளித்தது. ஆனால், காயத்தால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாத சூழல் உருவாக, ரிஷப் பண்ட் சிரமப்பட்டபடி நடந்து ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.

ஓய்வில் இருந்து திரும்பிய பண்ட்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்த பண்ட், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14ம் தேதி தொடங்க உள்ள தொடருக்கான இந்திய அணியிலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக பண்டின் பெயர் இடம்பெற்றுள்ளது.  இந்நிலையில் தான், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக களமிறங்கினார். முதல் போட்டியில் 90 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தார். இந்நிலையில் தான், பயிற்சி ஆட்டத்தின் போது பண்ட் மீண்டும் காயமடைந்துள்ளார். ஆனால், அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டு இருக்கும் எனவும், டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ஆடுகளத்தில் இருந்து வெளியேறி இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டி நிலவரம்:

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. துருவ் ஜுரெல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 132 ரன்களை விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணி 221 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்தியா, 241 ரன்களை முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.