கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒரு நாள் போட்டியில் விக்கெட் எடுத்திருக்கிறார் விராட் கோலி.


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இன்று (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தீபாவளி பரிசாக இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீரர்களில்,ரோகித் சர்மா,சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர். அதேபோல், ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் நெதர்லாந்து அணியினரின் பந்துகளை பறக்க விட்டு சதம் அடித்தனர். இவ்வாறாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்களை குவித்தது.


திணறிய நெதர்லாந்து:


பின்னர், 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நெதர்லாந்து அணி. அதன்படி 72 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நெதர்லாந்து அணி. அப்போது கேட்ச் பிடிப்பதற்காக ஓடிய இந்திய பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு காயம் ஏற்பட்டதால் அவரால் விளையாட முடியவில்லை. முன்னதாக, 4 ஓவர்கள் வீசிய அவர் ஓய்வு அறைக்கு சென்றார்.


ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு விக்கெட் எடுத்த கோலி:


கடந்த முறை ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதால் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பந்து வீசினார். அந்த போட்டியில் முன்னதாகவே ஹர்திக் பாண்டியா மூன்று பந்துகள் வீசிய நிலையில் மீதி மூன்று பந்துகளை விராட் கோலி வீசினார். அதில் 3 ரன்களையும் விட்டுக் கொடுத்தார். அப்போது எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் கோலி பந்து வீசியதை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.


இச்சூழலில், தான் இன்றைய போட்டியில் முகமது சிராஜுக்கு ஏற்பட்ட காயத்தால் விராட் கோலி பந்து வீசினார். அதன்படி, 24 வது ஓவரை வீசிய அவர் 3 பந்தில் நெதர்லாந்து அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ஸ்காட் எட்வர்ட்ஸ் விக்கெட்டை எடுத்தார். 


இது கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் பந்து வீசி அவர் எடுத்த விக்கெட்டாகும்.  மேலும், இது அவர் எடுத்த 5 வது ஒரு நாள் விக்கெட். அதன்படி இதற்கு முன்னதாக, அவர் பந்து வீசிய ஒரு நாள் போட்டிகளில் குக், கீஸ்வெட்டர், டி காக், மெக்கல்லம் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். தற்போது அந்த பட்டியிலில்  நெதர்லாந்து அணி வீரர் ஸ்காட் எட்வர்ட்ஸ் இணைந்துள்ளார். இச்சுழலில், விராட் கோலி விக்கெட் எடுத்ததை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.