இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள விராட்கோலிக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இந்த தொடர் முதல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்து ரவி சாஸ்திரிக்கு பதிலாக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் மீண்டும் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. ஆகவே அந்தத் தொடருக்கு இந்திய அணியை கட்டமைக்கும் பொறுப்பு ராகுல் டிராவிட்டிற்கு உள்ளது. இதற்காக தன்னுடைய முதல் தொடரிலேயே அவர் இளம் வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளார் என்று கருதப்படுகிறது. எப்போதும் இளம் வீரர்களை சிறப்பாக பட்டை தீட்டி கொண்டுவருவதில் டிராவிட் வல்லவர். எனவே அவருக்கு முதல் தொடரில் இத்தனை இளம் வீரர்கள் கிடைத்துள்ளது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், ஐபிஎல் 2021 சீசனில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ தன்னை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்க வேண்டுமெனில் வேறு எந்தவொரு பதவியிலும் பதவி வகிக்கக்கூடாது. டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருப்பதால், எனக்கு விருப்பம் இல்லை என்றார்.
மேலும், டிராவிட் எப்படி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஒப்புக்கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏற்கனவே, அவர் 19 வயதுக்குட்பட்ட பயிற்சியாளர் பதவியில் அவர் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அப்படி இருக்கையில் டிராவிட் எப்படி 19 வயதுக்குட்பட்ட பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் என்று எனக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்