இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஆர்.சி.பி. அணியின் முன்னாள் வீரரும், ஆர்.சி.பி. அணியின் ஆலோசகருமானவர் தினேஷ் கார்த்திக். தோனிக்கு முன்பாகவே கிரிக்கெட்டில் அறிமுகமான இவரது கிரிக்கெட் வாழ்வு ஏற்றத்தாழ்வுடன் இருந்தாலும், ஆர்.சி.பி. அணியில் இடம்பிடித்த பிறகு மீண்டும் உச்சம்பெற்றது. 


இவர் கடந்தாண்டு ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது மீண்டும் கிரிக்கெட் வீரராக களமிறங்கியுள்ளார். 

மீண்டும் கிரிக்கெட் ஏன்?


39 வயதான தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து விடைபெற்ற பிறகு, மீண்டும் கிரிக்கெட் வீரராக களமிறங்கியது ஏன்? என்று மனம் திறந்துள்ளார். பார்ல் மைதானத்தில் நடக்கும் போட்டியின்போது பேசிய தினேஷ் கார்த்திக், நான் இந்த தொடரில் பங்கேற்றதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஐ.பி.எல். தொடருக்குப் பிறகு இது ஒரு சிறந்த தொடர். அதனால், இந்த உண்மையான கிரிக்கெட் பந்தயத்தில் பங்கேற்க நான் ஆசைப்பட்டேன்.  இதைவிட சிறந்த தொடர் இருக்க முடியாது. 


மற்றொரு காரணம், நான் ராயல்ஸ் செட் அப் அணியில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய நண்பர்கள் பலரும் இந்த அணியில் ஆடுகிறார்கள். இதனால், என்னை நோக்கி இந்த வாய்ப்பு வரும்போது மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டேன். இங்கு ஏராளமான திறமையாளர்கள் உள்ளனர். முதல் ஓரிரு தினங்களில் நான் இங்கு இவ்வளவு திறமையாளர்கள் உள்ளனர் என்று ஆச்சரியப்பட்டேன். சில வீரர்கள் சரியாக ஆடவில்லை. இது சிறந்த அணி. நல்ல தொடர். 


இவ்வாறு அவர் கூறினார். 

முதல் வீரர்:


தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஐ.பி.எல். தொடர் போன்ற எஸ்.ஏ.20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கியுள்ளார். இந்த தொடரில் ஆடும் முதல் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ஆவார். கடந்தாண்டு இந்த தொடரின்போது வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். இந்த தொடரில் ஜோஸ் பட்லருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்கியுள்ளார். 


தினேஷ் கார்த்திக் 2004ம் ஆண்டே இந்திய அணிக்காக அறிமுகமானவர். இவர் 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1025 ரன்கள், 94 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1752 ரன்கள், 60 டி20 போட்டிகளில் ஆடி 686 ரன்ள் எடுத்துள்ளார். டெஸ்டில் 1 சதமும், 7 அரைசதங்களும், ஒருநாள் போட்டியில் 9 அரைசதங்களும், டி20 போட்டியில் 1 அரைசதமும் விளாசியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் 257 போட்டிகளில் ஆடி 22 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 842 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் தனது கடைசி சீசன்களில் ஆர்.சி.பி. அணிக்காக ஆடியபோது தவிர்க்க முடியாத வீரராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.