நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகையை விட அதிகமாக கொண்டாடப்பட்டது அதற்கு முந்தினநாள் நடந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டிதான். கடந்த ஆண்டை போலவே இந்திய அணி இந்தாண்டு பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்துவிடும் போல என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அப்போது வழக்கம்போல் இந்திய அணியின் தூணாக விராட் கோலி, ஒற்றை ஆளாக நின்று கெத்து காட்டினார். அன்றைய போட்டியில் 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார். கடந்த ஆண்டு தனது தலைமையிலான பாகிஸ்தான் அணியுடனான தோல்வியை, இந்தாண்டு பழி தீர்த்தார். 


இந்தநிலையில், விராட் கோலியின் ருத்ரதாண்டவம் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது யூடியூப் பக்கத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது, “ இந்திய அணி தொடக்கத்தில் 45 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது மொத்த இந்தியாவின் நம்பிக்கையாக விராட் கோலியும், ஹர்திக் பாண்டியா மட்டும் இருந்தனர்.இருவரும் தங்கள் பங்கிற்கு தலா 60 ரன்கள் அடித்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றிபெறும் என நினைத்தேன். அதற்கு பிறகு நான் களமிறங்கி இருக்கும் சொற்ப ரன்களை அடித்துவிடலாம் என்று எண்ணி இருந்தேன்.  






விராட் கோலிக்கு நிஜமாகவே உள்ளே ஏதோ ஆவி சென்றது என்று நினைக்கிறேன். என்ன ஒரு நாக்! அவர் விளையாடிய ஷாட்களை விடுங்கள், 45 பந்துகளுக்குப் பிறகு, கோலி  கங்காவிலிருந்து சந்திரமுகியாக மாறியதை நாங்க பார்த்தோம். அவர் கண்ணை பார்க்கணுமே, சந்திரமுகி படத்தில் ஜோதிகா, நடிகர் பிரபு முன்னாடி கட்டிலை தூக்கி ‘உதறவா’ என கத்துவாரே அது மாதிரி அனைக்கு நடந்துகிட்டார். இந்திய அணி வெற்றிக்கு 1 பந்தில் ஒரு ரன் தேவை என்றபோது நான் களமிறங்கினேன். அப்போது விராட் கோலி ஜோதிகாவை போன்று கண்ணை வைத்துகொண்டு என்னிடம், அங்க அடி, இங்க அடி என்று கூறினார். அப்போது நான் இங்க அடி, அங்க அடிலாம் நீ அடிச்சுகோப்பா.. என்னால எங்க அடிக்க முடியுமோ, அங்க நான் அடிச்சுக்கிறேன். 



இவ்வளவு நேரம் உன்னை ஆட வைத்த கடவுள், என்னை ஆட வைத்து இந்திய அணியை வெற்றிபெற செய்யமாட்டாரா..? என்று மனதிற்கு நினைத்தேன். 


தொடர்ந்து நான் விராட் கோலியிடம், அவன் பந்தை கால்களை பார்த்து போடுறானா..? எங்க போடுறான் என்று கேட்டேன். அதற்கு விராட் கோலி, காலுக்குள் தான் போடுறான், விலகி கவர்ஸ் பக்கம் சொருக சொன்னார். 


அடுத்த பந்தில் பந்தை போட்டவர் வைடாக வீசினார். அத்தாடி நமக்கு அந்த பந்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விலகி கொண்டேன். எக்ஸ்ட்ரா ஒரு ரன் கிடைத்ததும் மனதிற்குள் அப்படி ஒரு சந்தோஷம். அடுத்த பந்தை தூக்கிவிட்டேன் நான் நினைத்தது படியே பந்து சென்று இந்திய அணி வெற்றி பெற்றது” என அஷ்வின் தெரிவித்தார்.